நாட்காட்டிகளில் காணப்படும் ஸஹர் முடிவு நேரம் என்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: சில நாட்காட்டிகளில் ரமழான் மாதத்தில் ஸஹர் முடிவு நேரம் என்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம். அந்நேரம் பஜ்ர் தொழுகைக்குப் பத்து நிமிடங்கள் அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு முன் நியமிக்கப்படுகின்றது. இதற்கு சுன்னாவில் ஆதாரம் உண்டா? அல்லது இது பித்அத்தைச் சார்ந்தா?

பதில்: இது பித்அத்தைச் சார்ந்ததாகும். சுன்னாவில் இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. மாறாக சுன்னா இதற்கு மாற்றமாகவே உள்ளது. ஏனென்றால் அல்லாஹுத்தஆலா அவனுடைய சங்கையான வேதத்தில் கூறுகின்றான்: 'இன்னும் (பஜ்ர் நேரம்) என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீறுவதற்கு முற்படாதீர்கள். இவ்வாறே தங்களைக்காத்து பயபக்தியுடையோராக ஆகுவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.” (அல்பகறா:187)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக பிலால் இரவில் அதான் கூறுவார். இப்னு உம்மி மக்தூமுடைய அதானை நீங்கள் செவியேற்கும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள். ஏனென்றால் அவர் பஜ்ர் உதயமாகும் வரை அதான் கூறமாட்டார்.”

மனிதர்கள் செய்யக்கூடிய இந்த ஸஹர் முடிவு நேரம் என்பது அல்லாஹ் கடமையாக்கியதைவிட மேலதிகமான ஒன்றாக இருக்கின்றது. எனவே, இது அசத்தியமாகும். மேலும், இது மார்க்கத்தில் கடும்போக்குத்தனமுமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'கடும்போக்குத்தனம் உடையவர்கள் அழிந்துவிட்டார்கள், கடும்போக்குத்தனம் உடையவர்கள் அழிந்துவிட்டார்கள், கடும்போக்குத்தனம் உடையவர்கள் அழிந்துவிட்டார்கள்.”

பதிலளித்தவர்: அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்

பார்க்க: மஜ்மூஉ பதாவா இப்னி உஸைமீன்: (19/227)

தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்