நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 4

بسم الله الرحمن الرحيم

கண்ணூறுக்குக் காரணமாக இருந்தவரைக் கழுவி எடுப்பதே கண்ணூறுக்குரிய சிகிச்சையாகும்.

1.   ஒரு நாள் ஆமிர் இப்னு ரபீஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர் குளித்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ணுற்ற ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: "இன்றைய தினத்தைப் போன்ற ஒரு தினத்தை நான் பார்த்ததில்லை. இந்தத் தோலைப் போன்று மறைத்து வைத்திருக்கும் ஓரு தோலை நான் பார்த்ததில்லை" என்று கூறி சற்று நேரம் அவ்விடத்தில் தரித்திருக்கவில்லை ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்கள். பிறகு அவர் நபியவர்களிடத்தில் கொண்டுவரப்பட்டார். அப்போது நபியவர்களை நோக்கி: "நீங்கள் ஸஹ்லை மயக்கமுற்ற நிலையில் அடைந்திருக்கிறீர்கள்" என்று சொல்லப்பட்டது. அதற்கு நபியவர்கள்: "இவருக்குக் கண்ணூறு ஏற்பட்டிருக்கும் விடயத்தில் யாரையாவது குற்றம் சாட்டுகிறீர்களா?" என வினவினார்கள். அதற்கு அவர்கள்: "ஆமிர் இப்னு ரபீஆவை சந்தேகப்படுகிறோம்" என்றார்கள். அப்போது நபியவர்கள்: "உங்களில் ஒருவர் தனது சகோதரனை எதற்காகக் கொளை செய்ய வேண்டும்?! உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரனிடத்தில் தன்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கக்கூடியதைக் கண்ணுற்றால் அவர் தனது சகோதரனுக்காக அபிவிருத்தியை நாடிப் பிரார்த்திக்கட்டும்!" என்று கூறினார்கள். பிறகு தண்ணீரைக் கொண்டு வருமாறு பணித்தார்கள். மேலும், ஆமிரை நோக்கி வுழூச் செய்யுமாறும் தனது முகம், முழங்கை உட்பட இரு கரங்கள், இரு முட்டுக்கால்கள், தனது வேட்டியின் உட்பாகம் ஆகியவற்றைக் கழுவுமாறு ஏவினார்கள். இன்னும், அதனை மயக்கமுற்ற அத்தோழர் மீது ஊற்றுமாறு பணித்தார்கள்.

இச்செய்தி இப்னு மாஜா: (3509) எனும் கிரந்தத்தில் அபூஉமாமா இப்னு ஸஹ்ல் இப்னி ஹுனைப் என்பவரைத் தொட்டு பதிவாகியுள்ளது. மேலும், ஸஹீஹ் இப்னி மாஜா: (2828) இலும் இதனைக் காணலாம்.

2. நபியவர்கள் கூறினார்கள்: "கண்ணூறு என்பது உண்மையானது. விதியை முந்திவிடக்கூடிய ஒன்று இருக்குமென்றால் கண்ணூறு அதனை முந்தியிருக்கும். எனவே, நீங்கள் (கண்ணூறுக்குரிய பரிகாரத்திற்காக) கழுவித்தருமாறு வேண்டப்பட்டால் கழுவிக் கொடுங்கள்."

இச்செய்தி முஸ்லிம் (2188) எனும் கிரந்தத்தில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

இதனுடைய விளக்கமாவது: நிச்சயமாக அனைத்து விடயங்களும் அல்லாஹுத்தஆலாவின் விதியின் ஏற்பாட்டைக் கொண்டு அமைந்துள்ளன. அவற்றில் எந்த ஒன்றும் அல்லாஹுத்தஆலா விதியாக ஏற்படுத்தியதைக் கொண்டே அன்றி நடைபெறாது. மேலும், அவனுடைய அறிவு அதனை முந்தியுள்ளது. அல்லாஹுத்தஆலாவின் விதியின் ஏற்பாடு அன்றி கண்ணூறின் தீங்குகள் மற்றும் அதுவல்லாத எந்த நலவோ, கெடுதியோ நிகழமாட்டாது. மேலும், இச்செய்தியில் இருந்து கண்ணூறுடைய விடயம் சரியானது என்றும் நிச்சயமாக அது தீங்குகளில் பலம் வாய்ந்தது என்றும் புரிந்து கொள்ளலாம். (இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ்)

துஆவைக் கொண்டு சிகிச்சை செய்தல்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம்: நிச்சயமாகத் துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகக் கிருபையாளன் என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தபோது, நாம் அவருக்குப் பதிலளித்து பின்னர், அவருக்கிருந்த துன்பத்தையும் நீக்கிவிட்டோம், அவருடைய குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம். இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் (நம்மை) வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கிறது." (அல்அன்பியா: 83, 84)

اللهُمَّ إنِّيْ أعُوْذُ بِكَ مِنَ البَرَصِ ، وَالجُنُوْنِ ، وَالجُذَامِ ، وَمِنْ سَيِّئِ الأسْقَامِ

(இந்த துஆ அபூதாவுத்: 1554 எனும் கிரந்தத்தில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், அஸ்ஸஹீஹுல் முஸ்னத்: 39 எனும் நூலில் ஸஹீஹ் எனும் தரத்திலும் ஸஹீஹ் அபீதாவுத்: 1375 எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளது.)

பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னைக் கொண்டு வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் நோய்களின் தீங்கில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன்.

துஆவைக் கொண்டு சூனியத்திற்குச் சிகிச்சை

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்.  இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு "பனூஸுரைக்" குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவன் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்துகொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் "ஒரு நாள்" அல்லது "ஓரிரவு" என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.  பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என்கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், "இந்த மனிதரின் நோய் என்ன?" என்று கேட்டார். அத்தோழர், "இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று சொல்ல, முதலாமவர் "இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?" என்று கேட்டார். தோழர், "லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)" என்று பதிலளித்தார். அவர், "எதில் வைத்திருக்கிறான்?" என்று கேட்க, "சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்" என்று பதிலளித்தார். அவர், "அது எங்கே இருக்கிறது?" என்று கேட்க, மற்றவர், "(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) "தர்வான்" எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர் அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, "ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப்போன்று உள்ளன" என்று கூறினார்கள்.  நான், "இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகும்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை) "என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. - புகாரி (5763), முஸ்லிம் (2189)

மேற்குறித்த செய்தி தொடர்பாக இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "ஷர்ஹு முஸ்லிம்" எனும் நூலில் கூறும் போது: "வெறுக்கத்தக்க விடயங்கள் நிகழும் போது துஆச் செய்வதும் அதனை திரும்பத்திரும்ப மேற்கொள்வதும் விரும்பத்தக்கது என்பதற்கும் அல்லாஹுத்தஆலாவின் பால் மீளுதலுடைய அழகிய வர்ணணைக்கும் இது ஓர் ஆதாரமாகத் திகழுகின்றது" என்கிறார்கள்.

துஆவைக் கொண்டு மயக்கமுறுதலுக்கு பரிகாரம் தேடல்

அதா இப்னு அபீரபாஹ் அவர்கள் கூறினார்கள்: "என்னைப் பார்த்து இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘சுவனவாசிகளில் நின்றும் உள்ள ஒரு பெண்ணை உனக்கு நான் தெரியப்படுத்தட்டுமா?’ என வினவினார்கள். அதற்கு நான்: ‘ஆம்.’ என்று கூற ‘இந்த கருத்த நிறமுறைய பெண்ணைப் பார்த்துக் கொள்’ என்றார்கள். ஒரு முறை இப்பெண்மணி நபியவர்களிடத்தில் வந்து, ‘நிச்சயமாக நான் மயக்கமுறுகிறேன், மேலும், என்னுடைய ஆடை விலகுகின்றது. எனவே, எனக்காக அல்லாஹ்விடத்தில் துஆச் செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டாள். அதற்கு நபியவர்கள்: ‘நீ நாடினால் பொறுமையாக இருப்பாய்! அப்போது, உனக்கு சுவனம் உண்டாகும். மேலும், நீ நாடினால் உனக்காக வேண்டி அல்லாஹ்விடத்தில் நோய் நிவாரணம் தேடிப் பிரார்த்தனை செய்கின்றேன்’ என்றார்கள். அதற்கு இப்பெண்: ‘நான் பொறுமையாக இருந்து கொள்கின்றேன்’ என்று கூறுவிட்டு, ‘நிச்சயமாக நான் ஆடை விலகக்கூடியவளாக இருக்கின்றேன். எனவே, எனக்காக அல்லாஹ்விடத்தில் ஆடை விலகாமல் இருக்க துஆச் செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டாள். அப்போது நபியவர்கள் இவளுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி: 5652, முஸ்லிம்: 2576)

நிச்சயமாக நோய்களுக்கான சிகிச்சைகள் அனைத்தும் துஆவிலும், அல்லாஹ்வின் பால் மீளுவதிலும் தங்கியுள்ளது என்பதை மேற்கூறப்பட்ட ஹதீஸில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

அத்தோடு (இவ்வாறு நடந்து கொள்வது) மூலிகை வைத்தியத்தைக் கொண்டு நிவாரணம் பெறுவதில் இருந்தும் மிகவும் பயனளிக்ககூடியதும் வெற்றியளிக்கக்கூடியதுமாக இருக்கின்றது.

மேலும் நிச்சயமாக அதனுடைய தாக்கம், உடம்பினுடைய செயற்பாடு ஆகியன உடல்சார் மருந்து வகைகளின் தாக்கத்தில் இருந்து (வேறுபட்டு) மகத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும்.

என்றாலும், நிச்சயமாக வெற்றியளிக்கக்கூடியதானது இரு விடயங்களைக் கொண்டே உண்டாகின்றது.

அவற்றில் ஒன்று: நோயுற்றவரின் புறத்தில் இருந்து. இதுவே அவருடைய நாட்டத்தின் உண்மைத் தன்மையாகும்.

மற்றது: சிகிச்சை செய்பவரின் புறத்தில் இருந்து. இதுவே அவருடைய முற்படுத்தலின் பலமும், தக்வா மற்றும் பொறுப்புச்சாட்டுதல் ஆகியவற்றைக் கொண்டு அவருடைய உள்ளத்தின் பலமும் ஆகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

மேலும் குறித்த செய்தியில் மயக்கமுறுபவரின் சிறப்பு இடம்பெற்றுள்ளது.

இன்னும், நிச்சயமாக உலக சோதனைகள் விடயத்தில் பொறுமையாகச் செயற்படுவது சுவனத்தை அனந்தரமாக்கும்.

அத்துடன் நிச்சயமாக கடுமையைக் கொண்டு எடுத்துக் கொள்வது யார் தன்னில் சக்தியை அறிகிறாரோ, மேலும் கடுமையைப் பேணுவது எவரில் பலவீனத்தை ஏற்படுத்தாதோ அவருக்கு இச்சலுகையைக் கொண்டு எடுத்து நடப்பது மிகச் சிறந்ததாகும்.

மேலும் இச்செய்தி நோய்நிவாரணம் மேற்கொள்வதை விட்டுவிடுவதும் கூடும் என்பதற்கு ஓர் ஆதாரமாகத் திகழுகின்றது. (பத்ஹ்)

இன்னும் இச்செய்தியில் நோய்நிவாரணத்தை நாடி நல்ல மனிதனிடத்தில் துஆச் செய்யுமாறு வேண்டுவதற்கும் அனுமதியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களைக் கொண்டு பரிகாரம் தேடல்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்." (அல்அஃராப்: 180)

இத்திருக்குர்ஆன் வசனத்தை அடியொட்டி பின்வருமாறு பிரார்த்திப்பார்.

اللهُمَّ إنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أنْتَ اللهُ الذِيْ لا إلهَ إلا أنْتَ، الرَّحْمَنُ، الرَّحِيم، المَلِك، القُدُّوس، السَّلام، المُؤمِن، المُهَيْمِن، العَزِيْز، الجَبَّار، المُتَكبِّر، الخَالِق، البَارِئ، المُصَوِّر، الخَلاق، القَاهِر، القَهَّار، الوَهَّاب، الرَزَّاق، الفَتَّاح، العَلِيْم، السَّمِيْع، البَصِيْر، الحَكِيْم، اللَطِيْف، الخَبِيْر، الحَليْم، العَظِيْم، العَفُوّ، الغَفُوْر، الغَفَّار، الشَاكِر، الشَّكُوْر، الكَبِيْر، الحَفِيْظ، الرَّقِيْب، الشَّهِيْد، الوَاسِع، الوَدُوْد، الحَقّ، المُبِيْن، القَوِيّ، المَتِيْن، المَوْلَى، الوَلِيّ، الحَمِيْد، المَجِيْد، الحَيّ، القَيُّوم، الوَاحِد، الأحَد، الصَّمَد، العَلِيّ، الأعْلَى، المُتَعَال، الكَرِيْم، الأكْرَم، ذُو الجَلال والإكْرَام، الإله، القَادِر، القَدِيْر، المُقْتَدِر، الأوَّل، الآخِر، الظَّاهِر، البَّاطِن، القَرِيْب، البَرّ، التَّوَّاب، الرَؤُوْف، المَلِيْك، مَالِكُ المُلْك، الغَنِيّ، الهَادِي، المُجِيْب، المُقِيْت، المُحِيْط، النَّصِيْر، المُصَوِّر، الوَكِيْل، الحَسِيْب، الكَفِيْل، المُسْتَعَان، الوَارِث، الرَّبّ، الجَمِيل، الحَكَم، الرَّفِيْق، السُّبُّوح، السَّيِّد، الشَّافِي، الطَّيِّب، الطَّبِيْب، القَابِض، البَاسِط، الرَّازِق، المُقَدِّم، المُؤَخِّر، المُعْطِي، المَنَّان، المُسَعِّر، الوِتْر، الحَيِيّ، السِّتِّيْر، الدَّيَّان، عَالِم الغَيْب وَالشَّهَادَة، عَلّام الغُيُوْب، غَافِر الذَّنْب، بَدِيْع السَّمَوَات والأرْض، فَاطِر السَّمَوَات والأرْض، نُوْر السَّمَوات والأرْض

முக்கிய குறிப்புக்கள்

•    அல்லாமா இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "மஜ்மூஉல் பதாவா" (1/66-69) என்ற பத்வாத் தொகுப்பில் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "அறிந்து கொள்! நிச்சயமாக மருந்தானது நிவாரணத்திற்கு ஒரு காரணமாகும். மேலும், அல்லாஹுத்தஆலாவே அதற்குக் காரணமாகத் திகழ்கின்றான். எனவே, அல்லாஹ் காரணமாக ஆக்கிய ஒன்றைத் தவிர வேறு எதுவும் நோய் நிவாரணத்திற்குக் காரணமாக அமையாது.

அல்லாஹ் நோய் நிவாரணத்திற்குக் காரணங்களாக ஆக்கியவை இரு வகைப்படும்:

1.   மார்க்க ரீதியான காரணங்கள். சங்கைமிக்க அல்குர்ஆன் மற்றும் துஆக்கள் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

நபியவர்கள் சூரதுல் பாதிஹா விடயத்தில் "நிச்சயமாக அது நோய்நிவாரணி என்று உனக்கு அறிவித்தது எது?" என்று வினவிய செய்தியையும் நபியவர்கள் நோயாளிகளுக்கு துஆவைக் கொண்டு ஓதிப்பார்க்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற வழிமுறையும் இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. எனவே, இதன் காரணமாக அல்லாஹ் யாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாடுகிறானோ அவருக்கு இதனைக் கொண்டு நிவாரணம் அளிப்பான்.

2.   உணர்வு ரீதியான காரணங்கள்: இதற்கு தேன் போன்ற மார்க்க வழியில் அறிமுகமான சில மருந்துத் தன்மைவாய்ந்த பொருட்களை அல்லது, அனுபவவழியில் மக்கள் மத்தியில் பரீட்சயம் பெற்ற அதிகளவான மருந்து வகைகளை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்."

  • சில சமயம் நோயாளி நிவாரணம் அளிக்கப்படமாட்டார். காரணம், அவருக்கு என்று நியமிக்கப்பட்ட வாழும் காலம் நிறைவுற்றிருக்கும். அதன் காரணமாக குறித்த நோயைக் கொண்டு அவருடைய மரணம் அவருக்கு விதியாக்கப்பட்டிருக்கும்." (மஜ்மூஉ பதாவா அல்லாமா இப்னு பாஸ்: 8/72)

சூனியத்திற்கான பரிகாரங்கள்

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "மஜ்மூஉல் பதாவா" (8/144) என்ற தனது பத்வாத் தொகுப்பில் பின்வருமாறு சூனியத்திற்கான பரிகாரங்களை வகைப்படுத்தியுள்ளார்கள்.

  1. சூனியக்காரன் செய்த சூனியத்தைத் தேடிப்பார்க்க வேண்டும். அவ்வாறு தேடிப்பார்க்கையில் உதாரணமாக, ஓர் இடத்தில் முடியில் அல்லது சீப்பில் அல்லது ஏதாவது ஒன்றில் சூனியம் செய்து வைத்திருப்பதாக அறியப்பட்டால். அல்லது ஒருவருடைய இடத்தில் அவன் செய்து வைத்துள்ளான் என்று அறிந்தால் சூனியம் செய்யப்பட்ட அப்பொருள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். இப்படிச் செய்வதின் மூலம் அதில் செய்யப்பட்ட சூனியம் செல்லுபடியற்றதாக ஆகிவிடும். சூனியக்காரன் நாடியது நடக்காமல் போய்விடும்.
  2. சூனியம் செய்யப்பட்ட இடத்தை அறிவிக்குமாறு அல்லது மற்றொரு சூனியத்தைப் பயன்படுத்தாது வேறுவழிகளில் சூனியத்தை அகற்றுமாறு சூனியக்காரனைக் கட்டாயப்படுத்த வேண்டும். அவ்வாறு ஒரு சூனியக்காரன், தான் செய்த சூனியத்தை அகற்றக்கூடியவன் என்று அறிமுகமாகி இருந்தால் அவனை நோக்கி ஒன்றில் நீ செய்ததை அகற்றிவிடு! அல்லது உன்னுடைய கழுத்து துண்டிக்கப்பட்டுவிடும் என்று கூறவேண்டும். பிறகு அவன் அதனை அகற்றினால் ஆட்சியாளர் அவனைக் கொலை செய்துவிடுவார். ஏனெனில், நிச்சயமாக சூனியக்காரனைப் பொருத்தளவில் அவன் சரியான கருத்தின் அடிப்படையில் தவ்பாவைக் கொண்டு வேண்டுதலின்றிக் கொலை செய்யப்படுவான்.

-  இன்ஷா அல்லாஹ் தொடரும்.