நபி வழியில் வுழூச் செய்வோம் – 02

بسم الله الرحمن الرحيم

வுழூவில் நீரை வீண்விரயம் செய்வது தடைசெய்யப்பட்டதாகும்.

மார்க்கத்தில் வீண்விரயம் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்: நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண்விரயம் செய்பவர்களை விரும்பமாட்டான்.

-     அல்அஃராப்: 31

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு கையளவு நீரினால் குளிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு கையளவு நீரினால் வுழூச் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

-     புஹாரீ, முஸ்லிம்

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: கடற்கரையோரத்தில் இருந்தாலும் நீரில் வீண்விரயம் செய்வது தடுக்கப்பட்ட ஒன்றாகும் என்பதில் அனைத்து அறிஞர்களும் ஒன்றுபட்டுள்ளனர்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: வுழூவிலும் வுழூவல்லாத விடயங்களிலும் வீண்விரயம் செய்வது இழிவாக்கப்பட்ட செயல்களில் ஒன்றாகும்.

-     ஷரஹு ரியாளிஸ்ஸாலிஹீன்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வுழூச் செய்தார்கள்?

1.     வுழூச் செய்ய ஆரம்பிக்கும்போது நிய்யத் வைக்க வேண்டும்.

நிய்யத் என்றால் ஒரு விடயத்தை நாடுவதாகும். மார்க்க அடிப்படையில் நிய்யத் என்றால் அல்லாஹ்வின்பால் நெருங்குவதற்காக வேண்டி ஓர் இபாதத்தை செய்வதற்கு உள்ளம் உறுதிகொள்ளல் ஆகும்.

வுழூச் செய்தவற்கு நிய்யத் வைப்பது அதனுடைய நிபந்தனைகளுள் ஒன்றாகும். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.

-     புஹாரீ, முஸ்லிம்

நிய்யத்தை நாவினால் மொழிவது பித்அத்தாகும். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அவர்களுடைய தோழர்களோ நிய்யத்தை நாவினால் மொழியவில்லை. எனவே, அதனை விடுவது அவசியமாகும். நிய்யத்துடைய இடம் உள்ளமாகும்.

2.     பின்பு அல்லாஹ்வின் பெயர் கூற வேண்டும்.

வுழூச் செய்யும்போது பிஸ்மில்லாஹ் கூறாதவருக்கு வுழூ இல்லை என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்கள் அதிகமாக காணப்படுகின்றன. ஆனால், அவைகள் அனைத்தும் பலவீனமானவைகளாகும். சில அறிஞர்கள் இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்புக்களையும் ஒன்று சேர்த்து இந்த ஹதீஸை சரிகண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் பல அறிவிப்புக்களில் இந்த ஹதீஸ் வந்திருக்கின்ற காரணத்தினால் இது சரியான ஹதீஸாக இருக்கின்றது என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

இன்னும் சில அறிஞர்கள் இது குறித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களையும் பலவீனமானவை என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் வுழூச் செய்வதற்கு முன் அல்லாஹ்வின் பெயர் கூறுவது மிகவும் ஏற்றமானதும் நபிவழிக்கு மிக நெருக்கமானதுமாகும். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய செயல்களை அல்லாஹ்வின் பெயர் கூறியே ஆரம்பிப்பார்கள்.

3.     அல்லாஹ்வின் பெயர் கூறிய பின்பு இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவ வேண்டும்.

இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்அவ்ஸத் என்ற நூலில் வுழூச் செய்ய ஆரம்பிக்கும்போது இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவது சுன்னத்தாகும் என்பது ஏகோபித்த முடிவாகும் என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆதாரம்: உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வுழூச் செய்யும் நீரைக் கொண்டுவருமாறு அழைத்தார்கள். பின்பு அந்த நீரால் தனது இரு கைகளுக்கும் ஊற்றி மூன்று முறை கழுவினார்கள். பின்பு அவர்கள் வுழூச் செய்த பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய இந்த வுழூவைப் போன்றே வுழூச் செய்தார்கள் என்று கூறினார்கள்.

-     புஹாரீ

இரு கைகளையும் ஒன்று சேர்த்துக் கழுவ வேண்டுமா? அல்லது ஒவ்வொரு கையாகக் கழுவ வேண்டுமா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. சில அறிஞர்கள் ஒரு கையை முதலாவதாக மூன்று முறை கழுவிவிட்டு அடுத்த கையை மூன்று முறை கழுவலாம் என்று கூறியிருக்கின்றார்கள்.

இன்னும் சிலர் இரு கைகளையும் ஒன்றாகவே மூன்று முறை கழுவ வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள்.

இந்த இரண்டு முறைகளில் ஏதாவது ஒரு முறையைச் செய்தாலும் அந்த வுழூ சரியான வுழூவாகும். என்றாலும் முன்சென்ற உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் இரு கைகளையும் ஒன்றாகக் கழுவுவதே நபிவழியாகும் என்பதை உணர்த்துகின்றது.

கைவிரல்களை கோதிக்கழுவுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியிருக்கின்றார்கள். அவர்கள்: நீ வுழூச் செய்தால் உனது கைவிரல்களையும் கால்விரல்களையும் கோதிக்கழுவிக்கொள் என்று கூறினார்கள்.

- திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத்

4. பின்பு மூன்று முறை நாசிக்கு நீர் செலுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும்.

வாய்கொப்பளித்தல் என்றால் நீரை வாயினுள் செலுத்தி அதனை வாயினுள் சுற்றி பின்பு உமிழ வேண்டும். நாசிக்கு நீர் செலுத்துதல் என்றால் நாசின் அடிப்பகுதி வரை நீரை உள்வாங்கி பின்பு அதனை வெளியேற்றுவதாகும்.

மிக நன்றாக நாசிக்கு நீர் செலத்துமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியிருக்கின்றார்கள். நீ நோன்பாளியாக இருந்தாலே தவிர நாசிக்கு  மிக நன்றாக நீர் செலுத்துவிடு! என்று அவர்கள் கூறினார்கள்.

-     ஸஹீஹு அபீதாவூத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய்கொளிப்பதையும் நாசிக்கு நீர் செலுத்துவதையும் ஒரே நேரத்தில் சேர்த்து செய்பவர்களாகவே இருந்தார்கள். இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஒருபோதும் வாய்கொப்பளிப்பதையும் நாசிக்கு நீர் செலுத்துவதையும் பிரித்து செய்வது ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெறவில்லை.

-     ஸாதுல் மஆத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது ஒரு கையினாலே வாய்கொப்பளித்து நாசிக்கு நீரையும் செலுத்துவார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு கையினாலே வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தினார்கள்.

-     புஹாரீ, முஸ்லிம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாசிக்கு நீர் செலுத்தியதன் பின்பு அந்நீரை தனது இடது கையினால் வெளியேற்றுவார்கள். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை வுழூச் செய்தவற்கு நீரைக் கொண்டுமாறு அழைத்தார்கள். அவர் வுழூச் செய்யும்போது வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தினார். அந்நீரை தனது இடது கையால் அவர்கள் வெளியேற்றினார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று முறை செய்தார்கள். பின்பு அவர்கள் இதுவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வுழூவாகும் என்று கூறினார்கள்.

- ஸஹீஹுன் நஸாஈ

5. நாசிக்கு நீர் செலுத்தி வாய்கொப்பளித்ததன் பின்பு முகத்தை மூன்று முறை கழுவ வேண்டும்.

வுழூச் செய்யும்போது முகத்தை கழுவுவது கட்டாயமாகும். ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக எழுந்தால் உங்களுடைய முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

-     அல்மாஇதா: 6

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது முகத்தை கழுவுவதற்கு நீரை எடுக்கும்போது மூன்று அமைப்புக்களில் எடுத்திருக்கின்றார்கள்.

முதலாவது முறை: தனது ஒரு கையால் நீரை எடுப்பார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையை நீரினுள் நுழைத்து அதனை வெளியாக்கி தனது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.

-     புஹாரீ, முஸ்லிம்

இரண்டாவது முறை: தனது இரு கைகளாலும் நீரை எடுப்பார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளையும் நீரினுள் நுழைத்து அவ்விரண்டு கைகளாலும் நீரை அள்ளி தனது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.

-     புஹாரீ

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: இரண்டு கைகளாலும் நீரை அள்ளுவது மிக இலகுவானதும் பரிமாறுவதற்கு நெருக்கமானதாகவும் இருக்கும்.

மூன்றாவது முறை: ஒரு கையால் நீரை எடுத்து அந்நீரை அடுத்த கையில் ஊற்றி பின்பு இரு கைகளாலும் முகத்தை கழுவுவார்கள்.

ஆதாரம்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கையளவு நீரை எடுத்து அதனை இவ்வாறு தனது அடுத்த கையுடன் சேர்த்து  அவ்விரண்டாலும் தனது முகத்தை கழுவினார்கள்.

-     புஹாரீ

முகத்தின் எல்லை அகலத்தால் ஒரு காதிலிருந்து அடுத்த காதுவரைக்கும், நீளத்தால் முடி முளைக்குமிடத்திலிருந்து இரு தாடைகளும் ஒன்று சேரும் இடம் வரையுமாகும்.

முகத்தை கழுவும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தாடியை குடைந்து கழுவுவார்கள். அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்தால் தனது தாடியை குடைந்து கழுவுவார்கள்.

- ஸஹீஹ் இப்னு மாஜா

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்