ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

நோயுற்றிருப்பவர் மீது கடமையான அம்சங்கள்.

  • அல்லாஹ்வுடைய தீர்ப்பை பொருந்திக்கொள்வது நோயளியின் மீது கடமையாகும். மேலும்,அவனுடைய தீர்ப்பு விடயத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். அத்துடன் தன்னுடைய இரட்சகன் விடயத்தில் நல்லெண்ணம் கொள்ள வேண்டும். அதுவே அவருக்கு மிகச் சிறந்ததாகும்.

  • அச்சத்திற்கும்,எதிர்பார்ப்பிற்கும் மத்தியில் இருப்பது அவசியமாகும். தன்னுடைய பாவங்கள் விடயத்தில் அல்லாஹ்வுடைய தண்டனையைப் பயந்து கொள்ள வேண்டும். மேலும், தன்னுடைய இரட்சகனின் கருணையின் பால் ஆதாரவு வைக்க வேண்டும்.
  • எவ்வளவுதான் நோய் அதிகரித்தாலும் மரணத்தின் மீது ஆசை வைக்கக்கூடாது.
  • அவர் நிறைவேற்ற வேண்டிய உரிமைகள் ஏதும் இருந்தால்,தன்னால் முடிந்தளவு அவற்றை உரியவர்களுக்கு நிறைவேற்றிவிட வேண்டும். முடியாதபோது,அவை குறித்து வஸிய்யத் செய்துவிட வேண்டும். மற்றும், அவை தொடர்பான அவனங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இப்படிப்பட்ட வஸிய்யத் விடயத்தில் முந்திக் கொள்ள வேண்டும்.
  • அவர் தனது சொத்திலிருந்து வஸிய்யத் செய்ய விரும்பினால் அதனில் மூன்றில் ஒரு பங்கை மாத்திரம் வஸிய்யத் செய்ய வேண்டும். இதனை விட சற்றும் அதிகரிக்கக் கூடாது. மாறாக,குறைத்துக் கொள்வதே மிகச் சிறந்ததாகும்.
  • இதற்கு நீதத்தன்மையுள்ள இரு முஸ்லிம்களை சாட்சிகளாக்கிக் கொள்ள வேண்டும்.
  • அநியாயமான அமைப்பில் செய்யப்படும் வஸிய்யத் செல்லுபடியற்றதாகவும் நிராகரிக்கப்படத்தக்கதாகவும் இருக்கும்.
  • தன்னுடைய ஜனாஸா கிரியைகளை சுன்னா அடிப்படையில் செய்யுமாறு வஸிய்யத் செய்ய வேண்டும்.

மரணத்தருவாயில் உள்ளவருடன்...

  • لا إله إلا اللهஎன்ற வார்த்தையை அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது, لا إله إلا الله என்ற வார்த்தையை மொழியுமாறு அவருக்கு பணிக்க வேண்டும்.
  • அவருக்காக துஆச் செய்ய வேண்டும். நல்லதைத் தவிர வேறு எதனையும் அவர் முன்னிலையில் மொழியக்கூடாது.
  • மரணத்தருவாயில் உள்ளவரிடத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவது,ஜனாஸாவை கிப்லாவை முன்னோக்கி வைப்பது ஆகியன தொடர்பாக எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸும் இடம்பெறவில்லை.
  • காபிரான ஒருவர் மரணத்தருவாயில் இருக்கும் போது அவரிடத்தில் இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காகச் செல்வதில் குற்றம் ஏதும் கிடையாது.

உயிர் பிரிந்ததன் பிறகு...

  • கண்களை மூடிவிட வேண்டும். மேலும்,மரணித்தவருக்காக துஆச் செய்ய வேண்டும். நபியவர்கள் அபூ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்த போது பின்வருமாறு துஆச் செய்தார்கள்.

اللهُمّ اغْفِر لِأبِي سَلَمَة وَافَعْ دَرَجَتَه فِي المَهْدِيِّين وَاخْلُفه فِي عَقِبِه فِي الغَابِرِيْن وَاغفِرْ لَنَا وَلَهُ يَارَب العَالَمِيْن وافْسَحْ لَهُ فِي قَبْرِه وَنَوِّرْ لَهُ فِيْه

பொருள்: அல்லாஹ்வே! அபூ ஸலமாவை மன்னிப்பாயாக! மேலும் நேர்வழி நடந்தோரில் அவரின் அந்தஸ்தை உயர்த்துவாயாக! எஞ்சியவர்களில் அவருக்குப் பிறகு மாற்றீட்டை ஏற்படுத்துவாயாக! அகிலத்தாரின் இரட்சகனே! எங்களையும் அவரையும் மன்னிப்பாயாக! மேலும், அவருடைய கப்ரில் அவருக்கு விசாலத்தை ஏற்படுத்துவாயாக! இன்னும், அதிலே அவருக்கு ஒளியூட்டுவாயாக!

  • உடம்பை பூரணமாக மறைக்கக்கூடிய ஒரு துணியால் மூடிவிட வேண்டும். இச்சட்டம் இஹ்ராம் அணியாத நிலையில் மரணித்தவருக்காகும்.
  • ஜனாஸாவின் கிரியைகளை மிகத் துரிதமாக மேற்கொள்ளல்.
  • மரணித்த ஊரிலேயே அடக்கம் செய்தல்.
  • ஜனாஸாவுக்கு சமுகம் தந்தோர்களுக்கு ஜனாஸாவின் முகத்தில் போடப்பட்டிருக்கும் துணியை அகற்றி இரு கண்களுக்கு மத்தியில் முத்தமிட முடியும்.
  • மரணித்த செய்தியைச் செவியேற்கும் ஜனாஸாவின் உறவினர்கள் பொறுமையுடன் அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • அத்தோடு,إنَّا لِلهِ وَإنّا إليْهِ رَاجِعُون என்ற வார்த்தையை கூற வேண்டும். மேலும்,

اللهُمّ اجُرْنِي فِي مُصِيْبَتِي وَاخْلُف لِيْ خَيْرًا مِنْها

என்ற துஆவையும் மேலதிகமாகக் கூறிக்கொள்வர்.

  • உறவினர்கள் ஜனாஸாவுக்காக மூன்று நாட்களுக்கு துக்கம் அருஷ்டிப்பர். மனைவியைப் பொறுத்தளவில் அவள் தனது கணவனுக்காக நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் அனுஷ்டிப்பாள்.
  • மரணித்தவருக்காக ஒப்பாரிவிட்டு அழுதல்,கண்ணங்களுக்கு அறைந்து கொள்ளல், ஆடைகளைக் கிழித்துக் கொள்ளல்,மொட்டையடித்தல், முடிகளைக் கலைந்து கொள்ளல் போன்ற செயல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
  • ஜனாஸா குறித்து அறியாமைக்காலத்தில் அழைப்பு விடுப்பது போன்று எங்களது ஜனாஸாவுக்காக வேண்டி நாமும் அழைப்புவிடுக்கக்கூடாது. மாறாக, மரணச் செய்தி தொடர்பாக மக்களுக்குத் தெரியப்படுத்தலாம். அவ்வாறு தெரியப்படுத்தும் போது மரணித்தவருக்காக வேண்டி பாவமன்னிப்புக் கோருமாறு மக்களை வேண்டிக்கொள்ள அனுமதியுண்டு.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.