கோபத்தை அடக்கி நற்பாக்கியங்களைப் பெற்றிடுவோம்! – 03

بسم الله الرحمن الرحيم

கோபத்தை அடக்குவது நபியவர்களின் வஸிய்யத்தைப் பேணிப் பாதுகாப்பதாக அமையும்.

கோபம் ஏற்படும் போது அதனை அடக்கிக் கொள்ளுமாறு நபியவர்கள் வஸிய்யத் செய்துள்ளார்கள். எனவே, நாமும் கோபம் ஏற்படும் போது அதனை அடக்கிக் கொள்ளுவோம் என்றால், அதன் காரணமாக நபியவர்களின் வஸிய்யத்தை பாதுகாத்தவர்களாக ஆகிவிடலாம்.

ஒரு மனிதர் நபியவர்களிடத்தில் வந்து: "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வஸிய்யத் செய்யுங்கள்!" எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள்: "நீ கோபப்படாதே!" என்றார்கள். அப்போது அம்மனிதர் மீண்டும்: "எனக்கு வஸிய்யத் செய்யுங்கள்!" எனக் கேட்க, நபியவர்களும் அதே பதிலை அளித்தார்கள். மீண்டும் அம்மனிதர் அதே கேள்வியைத் தொடராகக் கேட்க, நபியவர்களும் அதே பதிலைத் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருந்தார்கள். (புகாரி)

இச்சம்பவத்தோடு தொடர்புடைய மனிதர் கூறுகிறார்: "நான் நபியவர்களின் இந்த வஸிய்யத்தை நன்கு சிந்தனை செய்து பார்த்தேன். கோபமானது அனைத்து வகையான தீங்குகளையும் ஒன்றிணைத்த ஒன்றாக உள்ளது என்பதை அப்போது தான் புரிந்துகொண்டேன்". (அஹ்மத்)

கோபத்தை அடக்குவதின் மூலம் சுவனத்தில் பிரவேசிக்கக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

எமது மார்க்கம் நாம் சுவனம் நுழைவதற்கான அனைத்து வழிகளையும் காட்டித் தந்துள்ளது. அப்படியான வழிகளில் ஒன்றாக, கோபத்தை அடக்குவதை இனம்காட்டி இருக்கின்றது. இதற்குச் சான்றாக, நபியவர்கள் முன்னிலையில் கோபப்பட்ட ஒருவரைப் பார்த்து: "நீ கோபப்படாதே! உனக்கு சுவனம் இருக்கின்றது" என்று கூறிய செய்தியைக் குறிப்பிடலாம். (ஸஹீஹுல் ஜாமிஉ)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.