கோபத்தை அடக்கி நற்பாக்கியங்களைப் பெற்றிடுவோம்! – 01

بسم الله الرحمن الرحيم

கோபம் ஷைத்தானுடைய தூண்டுதலால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒன்றாகும். இக்கோபமானது மனித வாழ்வில் கைசேதம், இழப்பு, நஷ்டம் போன்ற பாதிப்புகளை ஏற்படுவதற்கு மூல காரணமாகத் திகழ்கின்றது. அதனால் தான் மார்க்கம் இப்படியான கோபத்தை அடக்கிக் கொள்ளுமாறு உபதேசிக்கின்றது. மேலும், இம்மோசமான பண்பை விட்டும் மனிதன் தூரமாவதற்கு வேண்டிய வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் மார்க்கம் முன்வைக்கின்ற சில வழிகாட்டல்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

  1. கோபம் ஏற்படும் போது ஷைத்தானில் இருந்தும் பாதுகாப்புத் தேடல்.

கோபமானது ஷைத்தானின் புறத்திலிருந்து ஏற்படுவதால் கோபம் ஏற்படும் போது அவனில் இருந்தும் பாதுகாப்புத் தேடிக்கொள்வது மிகப் பொருத்தமான செயலாகும். இத்தகைய வழிகாட்டலையே நபியவர்கள் எமக்குக் காட்டித் தந்துள்ளார்கள்.

ஸுலைமான் இப்னு ஸுரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "நான் நபியவர்களுடன் இருந்தேன். அப்பொழுது இரு மனிதர்கள் நபியவர்கள் முன்னிலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் கோபத்தால் சிவந்து, கழுத்து நரம்புகள் மேலெழும்பிக் காணப்பட்டன. அப்போது நபியவர்கள்: நிச்சயமாக நான் ஒரு வார்த்தையை அறிவேன். அதனை அம்மனிதர் கூறுவாரென்றால் அவர் அடைந்த கோபம் தனிந்து விடும் என்று கூறிவிட்டு,

أعوذ بالله من الشيطان الرجيم

என்ற வார்த்தையைக் கூறிக்காட்டினார்கள்". (புகாரி, முஸ்லிம்)

மேலும், நபியவர்கள் கூறினார்கள்: "ஒருவருக்கு கோபம் ஏற்பட்டு, அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடினால் அவருடைய கோபம் தனிந்துவிடும்". (ஸஹீஹுல் ஜாமிஇஸ் ஸகீர்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

அபூ ஹுனைப் (மதனி)