ஒரு முறை ஸகாத் நிறைவேற்றப்பட்ட ஆபரணங்களுக்கு மீண்டும் ஸகாத் நிறைவேற்றப்பட வேண்டுமா?

ஒரு முறை ஸகாத் நிறைவேற்றப்பட்ட ஆபரணங்களுக்கு மீண்டும் ஸகாத் நிறைவேற்றப்பட வேண்டுமா? என்பது தொடர்பாக இந்த அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்! ?

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து, இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கியவனாக!

தங்கம், வெள்ளி போன்ற சொத்துக்களுக்கான ஸகாத்தானது வருடங்கள் கடந்து செல்வதற்கேற்ப தொடர்ந்தேர்ச்சியாக கடமையாகிக் கொண்டே இருக்கும் என்ற கருத்தை முன்னோர்கள் மற்றும் பின்னோர்களில் உள்ள அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளார்கள்.

இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மராதிபுல் இஜ்மா எனும் நூலில் கூறுகின்றார்கள்: எல்லா செல்வங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் நிறைவுறுகையில் அவற்றிற்குரிய ஸகாத் தொடர்ந்து கொண்டே செல்லும் என்ற விடயத்தில் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளார்கள். விளைச்சலின் மூலம் பெறப்பட்டவை மற்றும் கனிவர்க்கங்களைத் தவிர (அவை விடயங்களில்) நிச்சயமாக அவர்கள் ஒரு முறை கொடுத்தால் போதும் என்ற கருத்தை ஏகோபித்த கருத்தாகக் கொண்டுள்ளார்கள். (பக்கம்: 38)

மராதிபுல் இஜ்மாவில் உள்ள கருத்திற்கு விமர்சனமாக ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எதனையும் பதியவைக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.

இந்த ஏகோபித்த கருத்திற்கு நபியவர்களின் காலம் தொட்டு இன்று வரையான காலவரையறைக்குள் முஸ்லிம் சமுகத்திற்கு மத்தியில் காணப்பட்டுவரும் இது தொடர்பான செயற்பாடு சிறந்த எடுத்துக்காட்டாகும். நிச்சயமாக நபியவர்கள் கோத்திரங்கள் மற்றும் நாடுகளை நோக்கி ஸகாத் சேகரிப்பாளர்களை அனுப்பியுள்ளார்கள், அதன் போது சென்ற வருடம் ஸகாத் நிறைவேற்றப்பட்ட பொருட்களா? இல்லையா? என்று விசாரித்து ஸகாத் பொருட்களை சேகரிக்குமாறு எப்போதும் பணித்ததே இல்லை. மாற்றமாக மனிதர்களின் கரங்களில் காணப்படுகின்ற ஸகாத்துடன் தெடர்புபட்ட சொத்துக்களைச் சேகரிக்குமாறு மட்டுமே பணித்துள்ளார்கள்.

இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஸகாத் சேகரிக்கும் பொறுப்புதாரர் எங்காவது வளர்ந்து காணப்படும் விவசாயத்தையோ அல்லது வீற்றிருக்கும் ஒட்டகத்தையோ அல்லது ஆட்டையோ கண்ணுற்றால் அவைகளில் இருந்தும் ஸகாத்தை எடுக்கக்கூடியவராக இருப்பார். (அல்முதவ்வனா: 1/361)

அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் அப்தில்லாஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் ஒரு பெண்மணி தனது ஆபரணங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாழ்நாளில் ஒருவிடுத்தம் மாத்திரம் கொடுத்தால் போதுமா? என்று வினவப்பட்டபோது அவை தனது அளவை அடையும்போது ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பது வாஜிப் என்றும் அதுவே சரியான கருத்தும் கூட எனக் குறிப்பிட்டுள்ளார்கள். - சுருக்கம் - (விரிவாகக் காண்பதற்கு அஷ்ஷெய்க் அவர்களின் உத்தியோக பூர்வ இணையதளத்தை நாடவும்)

மேலும், அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் ஆபரணங்களுக்கு ஸகாத் கொடுக்கும் போது அவற்றை ஆரம்பத்தில் வாங்கிய விலையைக் கருத்தில் கொண்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்கும் போது அந்தந்த வருடத்தில் உள்ள விலையைக் கருத்தில் கொண்டு கொடுக்க வேண்டுமா? என வினவப்பட்டபோது ஆபரணங்களுக்கான ஸகாத்தானது ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதன் போது ஆரம்பத்தில் வாங்கிய விலையைக் கருத்தில் கொள்ளாது வருடம் பூர்த்தியாகையில் உள்ள விலையைக் கருத்தில் கொண்டே கொடுக்கப்பட வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார்கள். - சுருக்கம் - (விரிவாகக் காண்பதற்கு மஜ்மூஉல் பதாவா அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன், பாகம்: 18 வினா இலக்கங்கள் 18, 58ல் நாடுக)

மேலும், அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளதாவது: ஒவ்வொரு வருடமும் ஆபரணங்கள் தமது ஸகாத் கடமையாகும் அளவை அடையும்போது அவற்றுக்காக ஸகாத் கொடுப்பது வாஜிபாகும். இக்கருத்தை இமாம் அபூஹனீபா அவர்களும் இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஓர் அறிவிப்பிலும் இமாம் ஷாபிஇ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஓர் அறிவிப்பிலும் கூறியுள்ளார்கள். இக்கருத்தே அல்குர்ஆன் அஸ்ஸுன்னா மற்றும் வரலாற்றுச் சம்பவங்களில் இடம் பெற்றுள்ள தரவுகள் ஆகியவற்றிக்கு ஏற்றாற்போல் இணங்கிச் செல்கின்ற மிகச் சரியான கருத்தாக விளங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும், நூருன் அலத் தர்ப் என்ற மார்க்கத் தீர்ப்புத் தொகுப்பில் 84ம் இலக்கத்தில் பதிவான வினாவில் ஒரு பெண்மணியின் ஆபரணங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் நிறைவேற்றப்பட வேண்டுமா? அல்லது வாழ்நாளில் ஒரு விடுத்தம் மாத்திரம் நிறைவேற்றப்பட்டால் போதுமா? என வினவப்பட்டதுடன் அவ்வாறு ஒவ்வொரு வருடமும் நிறைவேற்றிவருவதால் ஒரு பெண்மணி தனது ஆபரணங்களுக்கு வேறு ஒரு தொகையை வழங்கிவருகிறாள், அவளது ஆபரணங்களோ எவ்வித வளர்ச்சியையும் காணாமல் அவற்றினது பொறுமதியுடன் மாத்திரம் சுருக்கிக் கொண்டே இருக்கின்றது இது சரியா? என்று வினவப்பட்டுள்ளது. அதற்கு, ஆம். அவற்றிக்கு ஸகாத் உள்ளது அவை வளராவிட்டாலும் கூட, ஒருவர் எப்படி தன்னிடத்தில் பெட்டியில் இருக்கும் தங்கத்திற்கு அது வளராத நிலையிலும் ஒவ்வொருவருடமும் ஸகாத் கொடுத்துவருகிறாரோ அவ்வாறே ஆபரணங்களுக்கும் ஸகாத் கொடுத்துவரவேண்டும். மேலும், அவற்றைக் கொண்டு வளர்ச்சியைப் பெற்றுக் கொள்வதற்குத் தடையை ஏற்படுத்திக் கொண்டவர் அவற்றின் உரிமையாளரைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே, ஆபரணங்கள் ஸகாத் கொடுக்கப்படுவதற்கான அளவை அடையும் போது ஏழை எளியவர்களின் தேவைகருதி அதனில் இருந்தும் ஸகாத் கொடுக்கப்படுகிறது. எப்போது அவ்வாபரணங்கள் ஸகாத் கடமையாகும் அளவை இழந்துவிடுகின்றனவோ அப்போது அவற்றில் இருந்தும் ஸகாத்வரி அறவிடப்படமாட்டாது என்று பதிலளித்துள்ளார்கள்.

மேலும், ஸகாத் என்ற அறபுச் சொல்லுக்கு வளர்ச்சி, அதிகரித்தல் என்று விளக்கம் கூறுவது மொழிசாந்த விளக்கமேயன்றி வேறில்லை. உண்மையில் ஸகாத் கடமையாகும் சொத்துக்களில் அவை வளரக்கூடியதாகவும் அதிகரிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. (பார்க்க: மஜ்மூஉ பதாவா வரஸாஇலுஷ் ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்உஸைமீன், தொகுப்பு: இரு பணங்களுக்கான ஸகாத்)

அதேபோன்றுதான் சுத்தம் என்ற கருத்தும் மொழி ரீதியான கருத்தாகக் கொள்ளப்படுகின்றது. (அல்முஃஜமுல் வஸீத்: 1/398) இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஸகாத்தானது, ஸகாத் கொடுப்பவரின் உள்ளத்தை தூய்மைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்ற விளக்கமும் நாடப்படுகின்றது. சான்றாக அத்தவ்பா அத்தியாயத்தின் 103ம் வசனத்தைக் காண்க.

மற்றும், ஒருவர் தனது ஆபரணங்களுக்கு வருடாவருடம் ஸகாத் கொடுப்பதால் காலப்போக்கில் தனது ஆபரணங்களில் பெரும் பகுதியை இழக்க நேரிடும் என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகின்றது. ஸகாத் கொடுப்பதால் இந்நிலைக்கு ஒருவர் தள்ளப்படுவார் என்று கற்பனை செய்வது அல்லாஹ்வுடனான முறையற்ற சிந்தனைப்போக்காகும். மேலும், இப்படியான அச்சம் ஏற்படக்கூடியவர்கள் தம்மிடத்தில் இருக்கக் கூடியவைகளை மென்மேலும் பெருக்கிக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஸகாத்தின் பெறுபேறுகளைக் கண்ணெதிரில் கண்டுகொள்ளலாம். அதனால்தான் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அநாதைகளின் சொத்துக்களுக்குப் பொறுப்புதாரர்களாகத் திகழுகின்றவர்களுக்கு அவற்றுக்கான ஸகாத்தை வருடாவருடம் கொடுத்து குறையச் செய்துவிடாமல் அவற்றை வியாபாரத்தில் ஈடுபடுத்தி பெருக்கிக் கொள்ளுமாறு உபதேசம் செய்துள்ளார்கள். இது குறித்த செய்தியை பைஹகி, தபராணி மற்றும் முஅத்தா ஆகிய கிரந்தங்களில் காணலாம்.

இன்னும், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது கண்காணிப்பின் கீழ் இருந்த இரு அநாதைகளின் சொத்துக்களில் இருந்து ஸகாத்தைக் கொடுத்துவரக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற செய்தி முஅத்தா எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இச்செய்தி கூட குறித்ததொரு ஸகாத் பொருளில் குறைவு ஏற்பட்டு வந்தாலும் வருடாவருடம் அதற்கான ஸகாத்தை நிறைவேற்றி வரவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டக்கூடியதாக அமைந்துள்ளது.

எனவே, நாம் ஏற்கனவே குறிப்பிட்ட செய்திகளை மையமாக வைத்து இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தின் அடிப்படையில் அலி, இப்னு உமர், ஜாபிர், ஆயிஷா, ஹஸன் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களும் நவீன காலத்தில் அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ், அல்லஜினாவின் அறிஞர் குலாம் (9/410) மற்றும் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் (அஷ்ஷரஹுல் மும்திஉ: 6/14) போன்றவர்கள் அநாதைகளின் சொத்திலிருந்து ஸகாத் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! எப்போதும் நாம் அவசரப்பட்டு எக்கருத்தின் பாலும் கவர்ந்து செல்லக்கூடாது. ஏனெனில், அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் உள்ள போதனைகள் யாவும் காலத்தால் கடந்தவை பல்வேறுபட்ட திறமைசாலிகள் அவற்றை வாசித்து விளங்கி எமக்கு விளக்கம் தந்துள்ளார்கள். எனவே, அவசரப்பட்டு ஒருவருடைய கருத்துடன் மாத்திரம் சுருக்கிக் கொள்ளாது பல அறிஞர்களுடைய விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்ததன் பின்னரே ஒரு முடிவிற்கு வரவேண்டும். அப்போது தான் எப்படியான விடயங்களில் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளார்கள் மேலும் எப்படியான விடயங்களில் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து ஆவன செய்வதற்கு வழிவகுக்கும் என்பததை மனதிற் கொள்க.

தொகுப்பு: அபூஹுனைப்