உழ்ஹிய்யாவும் அதனை நிறைவேற்றுபவர் கவனிக்க வேண்டிய விடயங்களும் – 04

بسم الله الرحمن الرحيم

கேள்வி: காது துண்டிக்கப்பட்ட பிராணியை உழ்ஹிய்யாக் கொடுக்கலாமா?

பதில்: அறிஞர்களுக்கு மத்தியில் இது விடயமாக நான்கு கருத்துக்கள் காணப்படுகின்றன.

முதல் கருத்து: காது துண்டிக்கப்பட்ட பிராணி உழ்ஹிய்யாவுக்குச் செல்லுபடியாகாது. இக்கருத்தை ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும் இமாம் மாலிக், தாவூத் அள்ளாஹிரீ ஆகியோரும் சரி கண்டுள்ளார்கள். இவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட அஹ்மத் என்ற கிரந்தத்தில் இடம்பெறும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியை ஆதாரமாக முன்வைக்கின்றார்கள். அந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்.

இக்கருத்தைக் கூறக் கூடியவர்கள் பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாக எடுத்திருக்கின்றார்கள். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஒரு கண் குருடாகிய பிராணி, முன் புறத்தால் காது துண்டிக்கப்பட்ட பிராணி, பின் புறத்தால் காது துண்டிக்கப்பட்ட பிராணி........ ஆகியவைகளை உழ்ஹிய்யாவாக வழங்கக்கூடாது என்று கட்டளையிட்டார்கள்.” (அஹ்மத்: 609,751, அபூதாவூத்: 2804, திர்மிதீ: 1498, நஸாஈ: 7/217, இப்னுமாஜா: 3142, இப்னு ஹிப்பான்: 5920, ஹாகிம்: 4/224)

இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டதல்ல. மாறாக, அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டதாகும் என்று இமாம்களான புஹாரீ, தாரகுத்னீ ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இரண்டாவது கருத்து: காதின் அரைவாசிப் பகுதியைவிட அதிகமாகத் துண்டிக்கப்பட்டால் அப்பிராணி செல்லுபடியாகாது. இது இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தாகும். இக்கருத்துக்கு ஆதரவாக முன்சென்ற அஹ்மதில் பதிவு செய்யப்பட்ட அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் முன்வைக்கப்பட்டது.

மூன்றாவது கருத்து: காதின் மூன்றில் ஒரு பகுதிக்கும் கூடுதலான பகுதி துண்டிக்கப்பட்டால் அப்பிராணி செல்லுபடியாகாது. இக்கருத்தை அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சரிகண்டுள்ளார்கள்.

நான்காவது கருத்து: பொதுவாகவே காது துண்டிக்கப்பட்ட பிராணியை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம். இக்கருத்தை ஹன்பலீ மத்ஹபைச் சார்ந்த சில அறிஞர்களும் இமாம் மாவர்தீ, அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் போன்ற அறிஞர்களும் சரிகண்டிருக்கின்றார்கள். இக்கருத்தே சரியான கருத்தாகும். ஏனென்றால், இது விடயத்தில்; தடை உள்ளதாக ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெறவில்லை.

கேள்வி: சில பற்கள் விழுந்த பிராணிகளை உழ்ஹிய்யாவாக வழங்க முடியுமா?

பதில்: இது விடயத்தில் ஹன்பலீ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களிடத்திலும் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களிடத்திலும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. பற்கள் விழுந்த பிராணியை உழ்ஹிய்யாவாக வழங்க முடியும் என்பதே சரியான கருத்தாகும். இக்கருத்தை ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சரிகண்டிருக்கின்றார்கள்.

கேள்வி: வால் துண்டிக்கப்பட்ட அல்லது வால் இல்லாத பிராணியை உழ்ஹிய்யாக் கொடுக்கலாமா?

பதில்: வால் துண்டிக்கப்பட்ட அல்லது வால் இல்லாத பிராணியை உழ்ஹிய்யாக் கொடுக்கலாம். இக்கருத்தை இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா, ஸஈத் இப்னுல் முஸய்யிப், ஹஸனுல்பஸரீ, ஸஈத் இப்னு ஜுபைர், அந்நஹஈ ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் சரிகண்டிருக்கின்றார்கள்.

கேள்வி: எவ்வகையான பிராணிகளை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம்?

பதில்: ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளைத் தவிர வேறு பிராணிகளை உழ்ஹிய்யாவாக வழங்க முடியாது. இம்மூன்று பிராணிகளையும் தவிர வேறு பிராணிகள் உழ்ஹிய்யாவுக்குச் செல்லுபடியாகாது என்பது அனைத்து அறிஞர்களினதும் ஏகோபித்த கருத்தாகும் என்று இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம்: 13/125)

கேள்வி: இம்மூன்று பிராணிகளிலும் எப்பிராணியை வழங்குவது மிகவும் சிறப்புக்குரியது?

பதில்: இது விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் மூன்று கருத்துக்கள் உள்ளன.

முதல் கருத்து: இம்மூன்று பிராணிகளிலும் ஒட்டகம் மிகச் சிறந்ததாகும். பின்பு மாடு சிறந்ததாகும். பின்பு ஆடு சிறந்ததாகும். பின்பு ஒட்டகத்தில் கூட்டுச் சேருவது சிறந்ததாகும். பின்பு மாட்டில் கூட்டுச் சேருவது கூடுமாகும். இக்கருத்தை அஹ்மத், ஷாபிஈ, அபூஹனீபா ஆகிய இமாம்களின் மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

இவர்கள் இக்கருத்துக்கு ஆதரவாக ஹதீ எனும் அறுத்துப் பலியிடுதலை கியாஸாக - சட்டம் பிடிப்பு முறையாக - எடுத்திருக்கின்றார்கள். இன்னும், 'யார் ஜுமுஆவுக்கு முதலாவது நேரத்தில் வருகிறாரோ அவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போலாவார்......” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றார்கள்.

இரண்டாவது கருத்து: ஒட்டகம், மாடு ஆகியவைகளைவிட ஆடே மிகச் சிறந்ததாகும். இக்கருத்தை இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சரிகண்டிருக்கின்றார்கள். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு செம்மறியாட்டை உழ்ஹிய்யாவாக வழங்கியிருக்கின்றார்கள், அவர்கள் சிறப்பானதைத் தவிர வேறொன்றையும் தெரிவு செய்யமாட்டார்கள் என இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் காரணம் கூறுகின்றார்கள்.

மூன்றாவது கருத்து: எந்தப் பிராணியின் இறைச்சி தூய்மையானதாகவும் அதிகமானதாகவும் விலை கூடியதாகவும் உள்ளதோ அப்பிராணியை அறுத்துப் பலியிடுவதே மிகச் சிறந்ததாகும். இக்கருத்தை இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

முதலாவது கருத்தே சரியான கருத்தாகும்.

கேள்வி: உழ்ஹிய்யா செல்லுபடியாவதற்கு ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியன எவ்வயதெல்லையை அடைந்திருக்க வேண்டும்?

பதில்: வெள்ளாடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளது முன்பற்கள் விழுந்து மீண்டும் அப்பற்கள் முளைத்தால் அப்பிராணிகளை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம். செம்மறி ஆட்டின் மயிர்கள் நின்ற நிலையில் இருந்து அதனுடைய முதுகுப் பகுதியில் சாய்ந்து விட்டால் அதனை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம்.

இவ்வாறான நிலையை ஒவ்வொரு பிராணியும் எத்தனை வருடங்களில் அடையும் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். அதன் பிரகாரம் ஒட்டகமாக இருந்தால் அதற்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகி ஆறாவது வருடத்தில் அது நுழைந்திருக்க வேண்டும். மாடாக இருந்தால் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி மூன்றாவது வருடத்தில் அது நுழைந்திருக்க வேண்டும். வெள்ளாடாக இருந்தால் ஒரு வருடம் பூர்த்தியாகி இரண்டாவது வருடத்தில் அது நுழைந்திருக்க வேண்டும். செம்மறி ஆடாக இருந்தால் அதற்கு ஆறு மாதங்கள் பூர்த்தியாகி ஏழாவது மாதத்தில் அது நுழைந்திருக்க வேண்டும்.

இக்கருத்து இந்த உம்மத்தின் ஏகோபித்த கருத்தாகும் என்று இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய அல்மஜ்மூஉ (8/394) என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

கேள்வி: உழ்ஹிய்யாவை செய்து முடிக்க நியமிக்கப்படும் வேலையாட்களுக்கு அவர்களுக்கு வழங்கும் கூலிக்குப் பகரமாக உழ்ஹிய்யாப் பிராணியின் பங்கிலிருந்து வழங்கலாமா?

பதில்: வேலையாட்களுக்கு வழங்கும் கூலிக்குப் பகரமாக உழ்ஹிய்யாப் பிராணியின் இறைச்சியை அவர்களுக்கு வழங்குவது தடுக்கப்பட்டது என்பதே பெரும்பாலான அறிஞர்களினதும் நான்கு மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களினதும் கருத்தாகும்.

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களது குர்பானி ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறும், அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் ஏழைகளுக்குப் பங்கிடுமாறும், உரிப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். (புஹாரீ: 1717, முஸ்லிம்: 1317, 349)

இந்த ஹதீஸை ஆதாரமாக முன்வைத்தே பெரும்பாலான அறிஞர்கள் இதற்குத் தடை விதித்திருக்கின்றார்கள்.

ஹஸனுல்பஸரீ, அப்துல்லாஹ் இப்னு உபைத் ஆகிய அறிஞர்கள் இதில் தடையில்லை என்ற கருத்தை முன்வைத்திருக்கின்றார்கள். இவர்களுக்கு மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ் கிடைத்திருக்காது என்று சில அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

வேலையாட்கள் வசதியவற்றவர்களாக இருந்தால், அல்லது அன்பளிப்பு என்ற அடிப்படையில் கூலிக்குப் பகரமாக அன்றி அவர்களுக்கு உழ்ஹிய்யாப் பங்கினை வழங்கலாம். அவர்களுக்குப் பூரணமாக அவர்களுடைய கூலியை வழங்கியதன் பின்பே அவர்களுக்கான உழ்ஹிய்யாப் பங்கினை வழங்குவது மிகச் சிறந்ததாகும் என அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

கேள்வி: உழ்ஹிய்யா இறைச்சியை விற்பனை செய்யலாமா?

பதில்: உழ்ஹிய்யா இறைச்சியை விற்பனை செய்வது கூடாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். ஏனென்றால், அதனைக் கூலியாக வழங்குவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். அவ்வாறே அதனை விற்பனை செய்வதும் அத்தடையினுள் பொதிந்து கொள்ளும் என்று இந்த அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். இன்னும், உழ்ஹிய்யா என்பது அல்லாஹ்வுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு காரியமாகும். எனவே, அதனை விற்பனை செய்வது கூடாது. இக்கருத்தை அஹ்மத், ஷாபிஈ ஆகிய அறிஞர்களின் மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

கேள்வி: உழ்ஹிய்யா இறைச்சியிலிருந்து சாப்பிடுவதினதும் அதனை தர்மமாகப் பிறருக்கு வழங்குவதினதும் சட்டம் என்ன?

பதில்: உழ்ஹிய்யா வழங்குபவர் அவ்வுழ்ஹிய்யாப் பிராணியின் இறைச்சியை சாப்பிடுவது விரும்பத்தக்கதாகும் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். ஏனென்றால், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.” (அல்ஹஜ்: 28)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யா இறைச்சி குறித்து பின்வருமாறு கூறினார்கள்: 'நீங்கள் உண்ணுங்கள், உண்ணக் கொடுங்கள், சேமித்து வையுங்கள்.” (புஹாரீ: 5567, முஸ்லிம்: 1972)

மேற்குறிப்பிடப்பட்ட இரு ஆதாரங்களையும் முன்வைத்து அதனை தர்மமாக வழங்குவதும் விரும்பத்தக்கதாகும் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

கேள்வி: உழ்ஹிய்யா இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியுமா?

பதில்: ஆரம்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு மூன்று நாட்களுக்கு மேல் உழ்ஹிய்யா இறைச்சியை சேமித்து வைப்பதைத் தடை செய்தார்கள். பின்பு அவர்கள் அதற்கு அனுமதியளித்தார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'மூன்று நாட்களுக்கு மேல் உழ்ஹிய்யா இறைச்சிகளை சேமித்து வைப்பதை நான் உங்களுக்குத் தடை செய்திருந்தேன். தற்போது உங்களுக்கு விரும்பிய கால அளவு அதனை சேமித்து வையுங்கள்.” (முஸ்லிம்: 1977)

எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உழ்ஹிய்யா இறைச்சியை சேமித்து வைக்கலாம் என்பதே மொத்த அறிஞர்களின் கருத்தாகும்.

கேள்வி: உழ்ஹிய்யாப் பிராணியை அறுக்கும்போது வெட்டப்பட வேண்டிய பகுதிகள் யாவை?

பதில்: நான்கு பகுதிகள் உழ்ஹிய்யாப் பிராணியை அறுக்கும்போது வெட்டப்பட வேண்டும். அவையாவன:

1. மூச்சுக்குழாய்

2. உணவுக்குழாய்

3,4. மூச்சுக்குழாயையும் உணவுக்குழாயையும் சூழ்ந்திருக்கக்கூடிய கனத்த இரு நரம்புகள்.

இந்த நான்கு பகுதிகளும் வெட்டப்பட்டால் இவ்வறுப்பு முறை ஹலாலாகும் என்பதில் அனைத்து அறிஞர்களும் ஒன்றுபட்டுள்ளார்கள். இவ்வாறு அறுப்பதே மிகச் சிறந்ததும் பூர்த்தியானதுமாகும் என அஷ்ஷெய்ஹ் பின்பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

-     தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்