உழ்ஹிய்யாவும் அதனை நிறைவேற்றுபவர் கவனிக்க வேண்டிய விடயங்களும் – 02

بسم الله الرحمن الرحيم

கேள்வி: உழ்ஹிய்யாவின் கடைசி நேரம் எது?

பதில்: உழ்ஹிய்யாவின் கடைசி நேரம் எதுவென்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் நான்கு வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

முதலாவது கருத்து: ஹஜ்ஜுப் பெருநாள் தினம் முடிவடையும் நேரமே அதனுடைய கடைசி நேரமாகும். இக்கருத்தை ஸஈத் இப்னு ஜுபைர், ஜாபிர் இப்னு ஸைத் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இரண்டாவது கருத்து: துல்ஹஜ் மாதத்தின் கடைசி நேரம் வரைக்கும் உழ்ஹிய்யாக் கொடுக்க முடியும். இக்கருத்தை சுலைமான் இப்னு யஸார், அபூஸலமா இப்னு அப்திர்ரஹ்மான், இப்னு ஹஸ்ம் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

மூன்றாவது கருத்து: அய்யாமுத் தஷ்ரீக்குடைய இரண்டாவது நாளின் கடைசி நேரம் வரைக்குமாகும். இக்கருத்தை இமாம் அஹ்மத், மாலிக், அபூஹனீபா, அஸ்ஸவ்ரீ ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

இக்கருத்து உமர், அலீ, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அபூஹுரைரா, அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹும் ஆகிய ஸஹாபாக்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்;டுள்ளதாக மேற்குறிப்பிடப்பட்ட இமாம்கள் கூறுகின்றார்கள். என்றாலும் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது 'பத்ஹுல் அல்லாம்” என்ற நூலில் 'ஸஹாபாக்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட இச்செய்திகளில் இப்னு உமர், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹும் அவர்களின் கருத்துக்களே சரியான அறிவிப்பாளர் வரிசையின்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய ஸஹாபாக்களின் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனம் காணப்படுகின்றது” என்று கூறுகின்றார்கள்.

நான்காவது கருத்து: அய்யாமுத் தஷ்ரீகுடைய கடைசி நாளாகிய மூன்றாவது தினத்தின் கடைசி நேரமே உழ்ஹிய்யாவுடைய கடைசி நேரமாகும். இக்கருத்தை அதாஃ, அல்ஹஸன் அல்பஸரீ, உமர் இப்னு அப்தில் அஸீஸ், மக்ஹூல், சுஹ்ரீ, ஷாபிஈ, ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த சில அறிஞர்கள், இப்னு தைமியா, இப்னுல் கைய்யிம், தாவூத் அள்ளாஹிரீ, இப்னு பாஸ், இப்னு உஸைமீன், அல்வாதிஈ ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் முன்வைத்துள்ளார்கள்.

இக்கருத்தையுடையவர்கள் பைஹகீ என்ற நூலில் இடம்பெறக்கூடிய 'அனைத்து அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களிலும் அறுத்துப் பலியிடலாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இடம்பெறும் செய்தியை ஆதாரமாக முன்வைக்கின்றனர். (அல்பைஹகீ: 9/296)

இந்த ஹதீஸைப் பொறுத்தவரையில் துண்டிப்பு ஏற்பட்ட குழறுபடியான ஒரு ஹதீஸாகும் என்று சில ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியிருப்பதன் காரணமாக இது பலவீனமான செய்தியாகும்.

இன்னும், இக்கருத்தையுடையவர்கள் அவர்களுடைய கருத்தை வலுப்படுத்தும் வகையில் 'பெருநாள் தினத்திலும் அய்யாமுத் தஷ்ரீகுடைய மூன்று தினங்களிலும் எவ்வாறு சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், அல்லாஹ்வை திக்ர் செய்தவற்கும், நோன்பு நோற்காமலிருப்பதற்கும், கல்லெறிவதற்கும் அனுமதியிருக்கின்றதோ அதேபோன்றுதான் அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதிநாள் வரைக்கும் உழ்ஹிய்யா வழங்கப்படுதற்கு அனுமதியிருக்கின்றது" என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

இக்கருத்தே சரியான கருத்தாகும்.

கேள்வி: இரவில் உழ்ஹிய்யாக் கொடுக்கலாமா?

பதில்: இது விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் நான்கு வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

முதலாவது கருத்து: இரவில் உழ்ஹிய்யாக் கொடுப்பது கூடுமாகும். என்றாலும் பகலில் கொடுப்பதே மிகச் சிறந்ததாகும். இக்கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.

இரண்டாவது கருத்து: இரவில் உழ்ஹிய்யாக் கொடுப்பது வெறுக்கத்தக்கதாகும். இக்கருத்தை ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும் சில ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும் முன்வைத்துள்ளனர்.

மூன்றாவது கருத்து: பொதுவாகவே இரவில் உழ்ஹிய்யாக் கொடுப்பது கூடுமாகும். இக்கருத்தை சில ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும் இப்னு ஹஸ்ம், இப்னு உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்களும் சரிகண்டிருக்கின்றனர்.

நான்காவது கருத்து: இரவில் உழ்ஹிய்யாக் கொடுப்பது கூடாது. இக்கருத்தை இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

மூன்றாவது கருத்தே சரியான கருத்தாகும். ஏனென்றால் பகலில் வழங்குவது சிறப்பானது, இரவில் வழங்குவது வெறுக்கத்தக்கது அல்லது தடைசெய்யப்பட்டது என்பதற்கு எவ்விதமான ஆதாரங்களும் காணப்படவில்லை.

- தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்