உண்மையான ஆலிம்களின் அடையாளங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

மார்க்கத்தைப் படித்து அதனை மக்களுக்கு மத்தியில் எத்திவைப்பவர்கள் ஆலிம்கள் எனப்படுகின்றனர். இந்த ஆலிம்கள் மகத்தான இரண்டு பணிகளில் ஈடுபடுகின்றனர். முதலாவது அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பாதுகாக்கின்றனர். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்: நிச்சயமாக நாங்களே இந்த திக்ரான குர்ஆனை இறக்கி வைத்தோம். நாமே அதனை பாதுகாப்போம்.

-     அல்ஹிஜ்ர்: 9

இந்த வசனத்தில் அல்லாஹ் அல்குர்ஆனைப் பாதுகாப்பதாக வாக்களித்துள்ளான். அவன் பல வழிமுறைகளில் இந்தக் குர்ஆனைப் பாதுகாக்கின்றான். அவைகளில் ஒன்றே தீனைச் சுமந்த ஆலிம்களைக் கொண்டு அவன் இந்த குர்ஆனைப் பாதுகாக்கின்றான். எனவே, ஆலிம்கள் மகத்தான ஒரு பணியில் ஈடுபடக்கூடியவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

அவர்கள் மேற்கொள்ளக்கூடிய இரண்டாவது பணி நபிமார்கள் விட்டுச்சென்ற அழைப்புப் பணியை மறுமை நாள் வரைக்கும் தொடர்ந்து மேற்கொள்வதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். அவர்கள் தீனாரையோ திர்ஹத்தையோ அனந்தரச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. மாறாக அவர்கள் அறிவையே அனந்தரச் சொத்தாக விட்டுச் சென்றுள்ளார்கள். எனவே, யார் அதை எடுத்துக்கொள்கிறாரோ அவர் நிரப்பமான ஒரு பங்கை எடுத்துவிட்டார்.

-     அபூதாவூத், அத்திர்மிதீ

நபிமார்கள் விட்டுச் சென்ற அந்த அறிவைச் சுமந்து அதனை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்கின்ற ஒரு பொறுப்பை ஆலிம்கள் மேற்கொள்கின்றார்கள் என்பதை நாம் இந்த ஹதீஸிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஆகவே, மகத்தான இரு பணியை ஆலிம்கள் மேற்கொள்கின்றார்கள் என்பதை ஆலிம்கள் மறந்துவிடக்கூடாது.

அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் நாம் பார்க்கின்றபோது ஆலிம்களுக்கென பல சிறப்புக்கள் கூறப்பட்டிருப்பதை நாம் கண்டு கொள்ளலாம். ஆனால், கவலைக்;குரிய விடயம் என்னவென்றால் ஆலிம்களின் சிறப்பைத் தெரிந்து வைக்கின்ற அதிகமானவர்கள் ஆலிம்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதை அறியாமல் இருக்கின்றனர்.

அதிகமான முஸ்லிம்கள் ஆலிம்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வேண்டி அவர்களுக்கென்று சில அடையாளங்களை உருவாக்கி அந்த அடிப்படையில் ஆலிம்களை தெரிந்து கொள்வதற்கு முற்படுகின்றனர். அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடையாளத்தை வைத்து ஆலிம்களை அடையாளம் காண்கின்றனர்.

சிலர் பேச்சுத்திறமையுள்ளவர்களை உண்மையான ஆலிம்கள் என்று கருதுகின்றனர். ஒரு சிலர் மிம்பர்களிலும் பேச்சு மேடைகளிலும் கம்பீரமாகப் பேசுவார்களாயின் அவர்களது பேச்சில் கவர்ச்சி கொண்ட அதிகமானவர்கள் அவர்களை உண்மையான ஆலிம்கள் என்று நம்புகின்றனர். ஆனால், அந்த ஆலிம்கள் அல்குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் முரணாகப் பல இடங்களில் பேசியிருப்பார்கள் என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. பேச்சுத்திறமையை வைத்தே உண்மையான ஆலிம்களைத் தெரிந்து கொள்ளலாம் எனக்கூறுவது மிகவும் தவறான ஒன்றாகும்.

உண்மையில் குத்பாப் பிரசங்கத்திற்கு கம்பீரமான பேச்சுடையவர்களை அதிகமானவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதிகமானவர்களின் பேச்சு கம்பீரமானதாகக் காணப்படும். அவர்கள் சுன்னாவுக்கு மாற்றமாக குத்பாப் பிரசங்கத்தை நீட்டுவார்கள். ஆனால், மக்களிடம் அவருடைய பேச்சுத்திறமை காரணமாக அவர் ஓர் ஆலிம் என்று கண்டுகொள்ளப்படுவார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: நிச்சயமாக நீங்கள் தொழுகையை நீட்டுவதும் குத்பாவைச் சுருக்குவதுமான ஒரு காலத்தில் இருக்கின்றீர்கள். இக்காலத்தில் ஆலிம்கள் அதிகமாகவும் பேச்சாளர்கள் குறைவாகவும் இருக்கின்றார்கள். மேலும், மக்கள் மத்தியில் ஒரு காலம் வரும். அக்காலத்தில் தொழுகை சுருக்கமாகவும் குத்பா நீளமாகவும் இருக்கும். அக்காலத்தில் பேச்சாளர்கள் அதிகமாகவும் ஆலிம்கள் குறைவாகவும் இருப்பார்கள்.

-     ஸஹீஹு அதபில் முப்ரத்

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்ட காலம் தற்போதைய காலம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதிகமான பள்ளிவாசல்களில் குத்பாப் பிரசங்கத்தை நீட்டுகின்றார்கள். தொழுகையை சுருக்கி விடுகின்றார்கள்.

இன்னும் சிலர் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பவர்களே உண்மையான ஆலிம்கள் என்று கருதுகின்றனர். ஓர் ஆலிமுக்கு ஒரு கேள்விக்கான விடை தெரியாவிட்டால் அவர் ஒரு ஆலிம் அல்ல என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு மனிதர் நாற்பது கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கூறினார்கள். இமாமவர்கள் நான்கு கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளித்தார்கள். ஏனைய அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகள் அவருக்குத் தெரியாது என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர்: நான் தூரமான ஓர் இடத்திலிருந்து வந்திருக்கின்றேன். எனவே, நான் மனிதர்களுக்கு என்ன கூறுவது? எனக்கேட்டார். அதற்கு இமாமவர்கள்: நான் மாலிகிடம் கேட்டேன். அதற்கு அவர் எனக்குத் தெரியாது எனக்கூறினார் என்று நீ கூறிவிடு என்றார்கள்.

ஆகவே, அனைத்து விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பது ஆலிம்களின் அடையாளமல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர் முப்தீ, அல்உஸ்தாத், அஷ்ஷெய்ஹ், அல்அல்லாமா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றவர்களை அவர்களுடைய பட்டத்தை வைத்து ஆலிம்கள் என்று கருதுகின்றனர். அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின்படி அவர்களின் அழைப்புப்பணிகள் காணப்படுகின்றதா என்பதை அவர்கள் அறிய முற்படமாட்டார்கள். பெரும் பட்டங்களும் பதவிகளும் ஆலிம்களின் அடையாளங்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னும் சிலர் யாரிடத்தில் அதிகமான புத்தகங்கள் உள்ள வாசிகசாலை இருக்கின்றதோ அவரை உண்மையான ஆலிம் எனக் கருதுகின்றனர். அதிகமான புத்தகங்களை வைத்து ஆலிம்களை அடையாளம் காணக்கூடாது. மாறாக அப்புத்தகங்களில் உள்ளவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்துகின்றார்களா? என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இமாம் பர்பஹாரீ ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: அதிகமான புத்தகங்களை வைத்திருப்பது உண்மையான அறிவல்ல. மாறாக, குறைவான புத்தகங்கள் இருந்தும் சுன்னாவைப் பின்பற்றுபவரே ஆலிமாவார். யார் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் மாறுசெய்கிறாரோ அவரிடம் அதிகமான புத்தகங்கள் காணப்படுமாயினும் அவர் பித்அத்வாதியாவார்.

இன்னும் சிலர் யாராவது ஒரு மத்ரஸாவில் அல்லது ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவைக் கற்றால் அவரை ஆலிம் என்று கருதுகின்றனர். அவர் எந்த மத்ரஸாவில் படித்தார், எவரிடமிருந்து அறிவைப் பெற்றுள்ளார் என்பதை அறிய முற்படமாட்டார்கள்.

அஹ்லுஸ்ஸுன்னாவைச் சார்ந்தவர்களைத் தவிர ஏனையவர்களிடம் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியாது. இமாம் இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: நிச்சயமாக இந்த அறிவு மார்க்கமாகும். எனவே, உங்களுடைய தீனை நீங்கள் யாரிடமிருந்து எடுக்கின்றீர்கள் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

-     முஸ்லிம் கிரந்தத்தின் முன்னுரை

இன்னும் பலர் தங்களுக்கு சார்பாக பத்வா வழங்கக்கூடியவர்களை மாத்திரம் ஆலிம்கள் என்று கருதுகின்றனர். அவர்களுக்குப் பாதகமாக பத்வா வழங்குபவர்களை தட்டிவிடுகின்றனர். மேலும், தனக்கு சார்பாக பத்வா வழங்குபவர்களை நாடிச்செல்கின்றனர்.

இதுபோன்ற இன்னும் பல அடையாளங்களை வைத்துக்கொண்டு தவறான நிலைப்பாட்டில் இருக்கின்றவர்களையெல்லாம் ஆலிம்கள் என்று மக்கள் இனம்கண்டு கொள்கின்றார்கள்.

அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் உண்மையான ஆலிம்களின் அடையாளங்களை எங்களுக்கு விவரிக்கின்றன. உண்மையான ஆலிம்களை இனங்காண்பதற்காக வேண்டி அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறும் அடையாளங்களில் சிலவற்றை நான் இங்கு கூறுகின்றேன். அவைகளைக் கருத்தில் கொண்டு உண்மையான ஆலிம்களை இனம்கண்டு அவர்களிடம் அறிவைத் தேடிச்செல்ல நாம் முயற்சிக்க வேண்டும்.

முதலாவது அடையாளம்

ஆலிம்கள் எப்பொழுதும் அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சக்கூடியவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் அதிகம் அஞ்சக்கூடியவர்கள் ஆலிம்களாவார்கள்.

-     அல்பாதிர்: 28

உண்மையான ஆலிம்கள் அல்லாஹ்வை அஞ்சுபவர்களாக இருப்பார்கள் என்பதை இவ்வசனம் குறிப்பிடுகின்றது. ஆலிம்கள் அதிகமாக அல்லாஹ்வைப்பற்றி அறிந்து வைத்திருக்கின்றார்கள், அவனுடைய சுவனம் மற்றும் நரகத்தைப்பற்றி அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதனாலேயே அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுபவர்களாக இருக்கின்றார்கள்.

இன்று அதிகமான ஆலிம்கள் அல்லாஹ்வை அஞ்சாமல் இஸ்லாமிய அகீதாவிற்கு மாற்றமான வழிகேடர்களின் கொள்கைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புகின்றனர். அல்லாஹ்வை அஞ்சாமல் சத்தியத்தைத் தெரிந்தும் மக்களுக்கு அதனை மறைக்கின்றார்கள். அல்லாஹ்வை அஞ்சாமல் வியாபார நடவடிக்கைகளில் மோசடி செய்கின்றார்கள். அல்லாஹ்வை அஞ்சாமல் பெண்கள் விடயத்தில் மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு ஒரு பட்டியலையே நாம் கூறலாம்.

எனவே, சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழக்கூடிய ஆலிம்கள் எப்பொழுதும் அல்லாஹ்வை அஞ்சுபவர்களா இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களிடமிருந்து மக்களுக்கு அல்லாஹ் பிரயோசனத்தை ஏற்படுத்துவான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்