இவர்கள் எந்த விடயத்திலும் ஸலபிய்யாக் கொள்கையில் இல்லை!

அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களிடத்தில் தற்கால ஸலபிய்யாக் கொள்கையில் உள்ள சிலரின் நிலைப்பாடு குறித்து வினவப்பட்டபோது, அவர் அளித்த பதிலை இங்கு தமிழ் வடிவில் தந்துள்ளோம். 

ஸலபிய்யா என்பது நபியவர்கள் மற்றும் ஸகாபாக்களினது வழிமுறையாகும். இக்கொள்கைக்கு அடிப்படையாக விளங்கக்கூடியவர்கள் எமக்கு முன்வாழ்ந்த நல்ல மனிதர்களாவர். அவர்களைப் பின்பற்றுவதே ஸலபிய்யாவாகும். ஆயினும், ஸலபிய்யா எனும் கொள்கையை ஒரு தனியான கொள்கையாக எடுத்து, அதற்கு உடன்படாதவர்களை அவர்கள் உண்மையில் நிலைத்திருப்பதை அறிந்தும், வழிகேடர்களாக அறிமுகம் செய்வது நிச்சயமாக ஸலபிய்யாக் கொள்கைக்குப் புறம்பானதாகும்.

மேலும், ஸலப்கள் அனைவரும் இஸ்லாத்தின் பால் அழைக்கக்கூடியவர்களாகவும், நபியவர்களின் சுன்னாஹ்வைச் சூழ ஒன்றிணையக்கூடியவர்களாகவும் இருந்தனர். அவர்களுடன் முரண்படக்கூடியவர்களை தவறான விளக்கம் சொல்வதையிட்டு வழிகேடர்களாக ஆக்கக்கூடியவர்களாக இருக்கவில்லை. எனினும், அத்தகைய முரண்பாடுகள் அகீதாவுடன் தொடர்புடையனவாக இருக்கும் போது மாத்திரம் அவற்றில் அவர்களுடன் முரண்படக்கூடியவர்களை வழிகேடர்களாகக் கருதிவந்தனர்.

ஆயினும், இன்று ஸலபிய்யாக் கொள்கையை உருவாக்கிய சிலர் தம்முடன் சரியான கருத்து இருந்தாலும் கூட அவர்களுடன் முரண்படக்கூடியவர்களை வழிகேடர்களாக ஆக்கும் பணியைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்களில் சிலர் இஸ்லாத்துடன் தம்மை இணைத்துக்காட்டும் வேறுசில குழுக்கள் தமக்கென்று ஒரு கொள்கையை வைத்திருப்பது போன்று இக்கொள்கையை குழுசார்ந்த கொள்கையாக எடுத்துக் கொண்டுள்ளனர். இதுவே அவர்களில் நிராகரிக்கத்தக்கதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமான அம்சமாகும்.

எம்முன்னோர்களான ஸலபுகளைப் பாருங்கள்! அவர்கள் இஜ்திஹாதுடன் தொடர்புடைய விடயங்களில் தங்களது போக்கை எவ்வாறு அமைத்திருந்தார்கள்? மேலும், அவற்றில் எந்தளவு பரந்த மனப்பான்மையுடன் நடந்திருக்கிறார்கள்? அவர்களோ பெரும் பெரும் மஸாயில்களிலும், அகீதா மற்றும் கல்வி சார் அம்சங்களிலும் கருத்து முரண்பட்டிருந்தார்கள். எடுத்துக்காட்டாக...

  • அவர்களில் சிலர், நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்றும் மற்றும் சிலர் பார்க்கவில்லை என்று வாதிட்டுள்ளனர்.
  • பிறிதொரு சாரார் மறுமை நாளில் தராசியில் நிறுக்கப்படுவது உலகில் மனிதன் புரியும் காரியங்களாகும் என்றும் வேறு சிலர் மனிதனது செயல்கள் பதியப்பட்ட ஏடுகள் மாத்திரமே நிறுக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளனர்.

 

அதேபோன்று, அவர்கள் பிக்ஹ் விடயங்களிலும் முரண்பட்டுக் காணப்பட்டனர். அவர்களுக்கு மத்தியில் திருமணம், சொத்துப்பங்கீடு, இத்தா போன்ற விடயங்களில் ஏராளமான முரண்பாடுகள் காணப்பட்டன. ஆயினும், அவற்றையிட்டு அவர்களில் சிலர் சிலரை வழிகேடர்களாகக் கூறக்கூடியவர்களாக இருந்ததில்லை.

எனவே, தமக்கொன்று ஒரு குழுவை ஏற்படுத்தி, சமுகத்தை விட்டும் வேறுபடுத்திக் காட்டக்கூடிய அடையாளச் சின்னங்களை வெளிப்படுத்தி, தம்மோடு இருப்பவர்களல்லாதவர்களை வழிகேடர்களாக ஆக்கக் கூடியவர்கள் எந்த விடயத்திலும் ஸலபிய்யாக் கொள்கையில் இருப்பவர்களல்லர் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, உண்மையான ஸலபிய்யா என்பது: அகீதா, சொல், செயல், கருத்து முரண்பாடு, கருத்து உடன்பாடு, கருணை, பரஸ்பரம், அன்பு போன்றவற்றில் ஸலபுகளின் வழிமுறையைக் கடைபிடிப்பதாகும்.

நபியவர்கள் கூறினார்கள்: ' பரஸ்பர அன்பு, கருணை மற்றும் அனுதாபம் ஆகியவற்றில் விசுவாசிகள் ஓர் உடம்பிக்கு ஒப்பாவார்கள். அதில் ஓர் அங்கம் நோயுற்றால் உடம்பின் ஏனைய அங்கங்கள் காய்ச்சல், உறக்கமின்மையின் காரணமாக நோயை அனுபவிக்கும்.' இதுவே ஸலபிய்யாவின் எதார்த்த நிலையாகும்.

அறபியில்:
அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன்
திறந்த சந்திப்புக்கள்
வினா இலக்கம்: 1322

தமிழில்:
அபூ ஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்