இவர்களுக்குப் பின்னால் நின்று தொழாதீர்கள்!

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ஸகாபாக்களைத் திட்டக்கூடிய, புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களை நிராகரிக்கக்கூடிய, அல்லாஹ்வின் பண்புகளுக்கு மாற்று வியாக்கியானம் கூறி அவற்றைத் திரிவுபடுத்தக்கூடிய நபருக்குப் பின்னால் நின்று தொழ முடியுமா?

பதில்: அந்நபர் ஸகாபாக்கள் அனைவரையும் அவர்கள் ஏற்றிருந்த மார்க்க விடயத்தில் குறை கற்பிக்கும் முகமாகத் திட்டக்கூடியவராக இருந்தல் அவர் காபிராகக் கருதப்படுவார். அவருக்குப் பின்னால் நின்று தொழ முடியாது. மாற்றமாக, ஸகாபாக்களில் சிலரை அறியாமை அல்லது மடமை அல்லது தனது தாய் தந்தையர் உற்பட தன்னுடன் வாழ்வோர் ஸகாபாக்களைத் திட்டுவதை அறிந்து திட்டக்கூடியவராக இருந்தால் அவர் சந்தேகத்தில் சிக்கியவராகக் கருதப்படுவார். அதனால், அவர் காபிராகிவிடமாட்டார். மாறாக, வழிகேடராகக் கருதப்படுவார். அவருக்குப் பின்னால் நின்று தொழுவதைப் பொறுத்தளவில் சீரான கொள்கையில் உள்ளவர்களுக்குப் பின்னால் நின்று தொழுவதே ஏற்றமாகும். அவ்வாறு அவரைவிட நேர்த்தியாக அல்குர்ஆனை ஓதக்கூடியவர்கள் வேறு யாரும் இல்லாது போகும் பட்சத்தில் அவருக்குப் பின்னால் நின்று தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும். ஆயினும், வேறு யாரும் இருக்கும் நிலையில் அவருக்குப் பின்னால் நின்று தொழுவது வெறுக்கத்தக்கதாகும்.

பொதுவாக, அல்லாஹ்வினுடைய பண்புகளைத் திரிவுபடுத்துபவர்களுக்கு அல்லாஹ் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்: "நிச்சயமாக எவர்கள் நமது வசனங்களைத் திரிவுபடுத்துகின்றார்களோ அவர்கள் நம்மிடமிருந்து மறைந்துவிட மாட்டார்கள். மறுமைநாளில் நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது அச்சமற்றவராக வருபவர் சிறந்தவரா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.” (புஸ்ஸிலத்: 40)

மேலும் கூறுகின்றான்: "அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரிவுபடுத்துவோரை விட்டுவிடுங்கள்! அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிக்காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.” (அல்அஃராப்: 180)

நுஅய்ம் இப்னு ஹம்மாத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "யார் அல்லாஹ்வின் பண்புகளை அவனைவிட்டும் தவிர்க்கின்றாரோ அவர் நிராகரித்துவிட்டார். யார் அல்லாஹ்வை அவனுடைய படைப்புக்கு ஒப்பிடுகிறாரோ அவரும் நிராகரித்துவிட்டார். அல்லாஹ் தன்னைப் பற்றி வரணித்தவற்றில் ஒப்புவமை கிடையாது.”

குறிப்பு: மேற்கூறப்பட்ட பிரிப்பு முறை விளக்கத்தை நான் ஆரம்பத்தில் கூறக்கூடியவனாக இருந்தேன். பின்னர், பொதுவாகவே எவர்களெல்லாம் ஸகாபாக்களைத் திட்டுகிறார்களோ அவர்களெல்லாம் காபிர்களாவார்கள் என்ற கருத்து எனக்கு சரியாகத் தென்பட்டது. ஆதலால், யார் ஸகாபாக்களைத் திட்டுகிறாரோ அவர் காபிராகிவிடுவார். அவர் ஸகாபாக்களின் மார்க்க விடயத்தில் குறை கற்பிக்கும் நோக்கில் அவ்வாறு திட்டினாலும் அல்லது அதுவல்லாத நோக்கில் திட்டினாலும் சரியே!

-    வழங்கியவர்: அஷ்ஷெய்க் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் (1423/ஸபர்/05)

-    தமிழில்: அபூஹுனைப்