இல்ல விளையாட்டுப் போட்டியில் இசையை ஒலிபரப்புச் செய்யும் முஸ்லிம் பாடசாலைப் பொறுப்புதாரிகள் சிந்தித்து நல்லுணர்வு பெறட்டும்!

بسم الله الرحمن الرحيم

அன்மையில் சில நாட்களாக இலங்கையின் பல பகுதிகளிலும் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தமை பலரும் அறிந்திருக்கலாம்.

மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதைப் போன்று அவர்களது விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதனை அடிப்படையாகக் கொண்டே எமது முஸ்லிம் பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன.
விளையாட்டுக்களைப் பொறுத்த வரையில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் இடம்பெறாவிடின், மார்க்கக் கடமைகள் பாழாக்கப்படாத விதத்தில் அவைகளுக்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு என்பது இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட கருத்தாகும்.
எமது முஸ்லிம் பாடசாலைகளில் நடைபெறக்கூடிய இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மார்க்கத்திற்கு முரணான சில காரியங்கள் அவ்வப்போது நிகழ்வதை மறுப்பதற்கில்லை. அப்படியான நிகழ்வுகளில் ஒன்றே இசையாகும்.
பல பாடசாலைகளின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இசை ஒலிபரப்பப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். அதான் சொல்லும்போது மாத்திரம் ஒலிபெருக்கி சத்தத்தை நிறுத்தி விட்டால் நாம் மார்க்க அடிப்படையில் விளையாட்டுப் போட்டி நடாத்துகிறோம் என்று சிந்திக்கின்றவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கிய இசை எமது நிகழ்ச்சிகளில் இடம்பெறக்கூடாது என்பதில் அக்கறையற்று இருப்பதை பார்த்து வருகிறோம். உண்மையில் அல்குர்ஆனையும் சுன்னாவையும் சிறந்த முறையில் கற்று விளங்கியவர்கள் இசை ஹராம் என்ற கருத்தை விட்டும் பின்வாங்கமாட்டார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: "(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு." (சூரா லுக்மான்: 06)
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் "வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்குகின்றனர்" என்பதற்கு அதன் மூலம் நாடப்படுவது இசை என்பதை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மூன்று முறை கூறினார்கள். இதை தப்ஸீர் இப்னு கஸீர், தப்ஸீருத் தபரீ ஆகிய நூற்களில் சூரா லுக்மானின் ஆறாவது வசனத்திற்கான விளக்கத்தைப் படிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.
இந்த வசனம் இசை குறித்துப் பேசுகிறது என்பதை தப்ஸீர் அறிஞர்களாகிய இப்னு அப்பாஸ், ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹுமா, இக்ரிமா, ஸஈத் இப்னு ஜுபைர், முஜாஹித், மக்ஹூல், அம்ர் இப்னு ஷுஐப் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர். (பார்க்க: தப்ஸீர் இப்னு கஸீர்)
நபித்தோழர்கள், தாபிஈன்கள் இசை ஹராம் என்பதில் சந்தேகமற்று இருந்தனர் என்பதை இவ்விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.  அல்குர்ஆனுக்கு நபித்தோழர்கள் கொடுத்த விளக்கங்களே மிகச் சிறந்த விளக்கம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. எனவே,  நபித்தோழர்களின் விளக்கங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு இசை ஹலால் என்று பத்வா வழங்குபவர்களின் முடிவை ஏற்றுக் கொள்வது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்." (புஹாரீ: 5590)
நபியவர்கள் இசையை ஹராமாக்கப்பட்ட ஏனைய பாவங்களாகிய விபச்சாரம், பட்டாடை அணிதல், மது அருந்துதல் ஆகியவற்றுடன் இணைத்து, இவைகளை ஆகுமாக்கக்கூடிய ஒரு கூட்டம் தோற்றம் பெறுவதை முன்னெச்சரிக்கையாகக் கூறிக்காட்டியுள்ளார்கள்.
இசைக்கருவிகள் அனைத்தும் ஹராம் என்பதில் நான்கு மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும் ஒன்று பட்டுள்ளனர் என்ற கருத்தை இமாம் இப்னு தைமியா, மற்றும் ஷெய்ஹ் அல்பானீ போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். (பார்க்க: மஜ்மூஉல் பதாவா: 11/576, அஸ்ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா: 1/145)
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: "மார்க்க அறிவின் வாடையை உணர்ந்தவர் இசை ஹராம் என்ற கருத்தைச் சொல்லாமல் மௌனமாக இருக்கமாட்டார். இசை என்பது பாவிகளினதும் மது அருந்துபவர்களினதும் அடையாளச் சின்னமாகும்." (இஙாஸதுல் லஹ்பான்: 1/228)
எனவே, இஸ்லாமிய சகோதரர்களே! பாடசாலையாக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம், எதுவாக இருப்பினும் இஸ்லாத்தை அடகு வைத்து எமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த நாம் முயற்சிக்கக்கூடாது. எதற்காகவும் இஸ்லாத்தை விட்டுக் கொடுக்காமல் இஸ்லாத்திற்காக எதையும் விட்டுக் கொடுப்பதே இஸ்லாத்திற்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தியாகம்.
எத்தனையோ இசை மேடைகளை ஆழிப் பேரலைகள் கவ்விக்கொண்டு சென்றன. எத்தனையோ இசை மேடைகள் பூமிக்குள் இழுக்கப்பட்டன. இவைகளைப் பார்த்து, கேட்டு நாம் படிப்பினை பெறாவிட்டால், அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சா விட்டால் எம்மைப் போன்று கேவலமானவர்கள் யாரும் இருக்க முடியாது.
அல்குர்ஆன், ஹதீஸின் வழிமுறையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இசை ஹலால் என்ற பிழையான தீர்ப்பின் பால் கவரப்பட்டு அதை தமக்கு ஹலாலாக்கிக் கொண்டவர்கள் நிறையப் பேர் என்பது கவலைக்குரிய விடயமே.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நிருவாகிகள், பொறுப்புதாரிகள் பாடசாலைகளை இஸ்லாமியப் பாடசாலைகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, அல்லாஹ் ஹராமாக்கியவற்றை அரங்கேற்றி அல்லாஹ்வின் கோபத்திற்கு உரித்தானவர்களாக தங்களை ஆக்கிக் கொள்ளக் கூடாது.
எனவே! அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து, எமது செயல்பாடுகள் யாவற்றையும் அவன் விரும்பக்கூடிய வகையில் அமைத்துக் கொண்டவர்களாக, ஷைத்தானுக்கு அடிமைப்படுவதை விட்டும் விலகி, சுவன வெற்றியின் பக்கம் விரைந்து செல்ல எமக்குத் தரப்பட்ட சொற்ப வாழ்நாட்களைப் பயன்படுத்தி அல்லாஹ்வின் பக்கம் நெருங்கிச் செல்வோம்.
சிந்திப்போம்! படிப்பினை பெறுவோம்!

والحمد لله رب العالمين