ஆலிம்களின் பார்வையில் மீலாதுந் நபி விழா

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினமாகக் கூறப்படும் ரபீஉல் அவ்வல் மாதத்தின் 12ம் நாள் எம்மை அண்மித்துவிட்;டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை முன்னிட்டு இத்தினத்தை பலரும் மார்க்கம் என்ற பெயரில் வருடா வருடம் சிறப்பித்துக் கொண்டாடி வருகின்றனர்.

மார்க்க ரீதியாக நாம் அலசுகின்றபோது இக்கொண்டாட்டத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். இக்கொண்டாட்டம் எவ்வாறு மார்க்கத்திற்கு முரண்படுகிறது என்பதையும் ஆலிம்கள் கூறியுள்ளனர். இக்கொண்டாட்டம் குறித்த சில ஆலிம்களின் கருத்துக்களை இங்கு முன்வைக்கின்றோம்.

1. ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததாகக் கூறப்படும் ரபீஉல் அவ்வல் மாதத்தின் சில இரவுகள் அல்லது, ரஜப் மாதத்தின் சில இரவுகள் அல்லது, துல்ஹஜ் மாதத்தின் எட்டாவது தினம் அல்லது, ரஜப் மாதத்தின் முதலாவது ஜும்ஆ தினம், மடையர்களால் நல்லவர்களின் பெருநாள் என அழைக்கப்படும் ஷவ்வால் மாதத்தின் எட்டாவது தினம் ஆகிய மார்க்கத்தில் சிறப்பிக்கப்படாத தினங்களை விஷேட தினங்களாக எடுத்துக்கொள்வது எமது ஸலபுகள் விருப்பத்திற்குரிய ஒன்றாகக் கருதாத, அவர்கள் மேற்கொள்ளாத பித்அத்களைச் சாரும். அல்லாஹ் மிக அறிந்தவன்." (மஜ்மூஉல் பதாவா)

2. இமாம் இப்னுல் ஹாஜ் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: "மிகப் பெரிய இபாதத், மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளம் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் உருவாக்கிய பித்அத்களில் ஒன்றே அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தில் கொண்டாடக்கூடிய மீலாத் கொண்டாட்டமாகும். இக்கொண்டாட்டம் முழுமையாகவே பித்அத்களையும் ஹராமாக்கப்பட்ட அம்சங்களையும் பொதிந்துள்ளது." (அல்மத்ஹல்)

3. இமாம் அல்பாகிஹானீ ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மாதத்தில் பிறந்தார்களோ அம்மாதத்திலேயே அவர்கள் இறப்பெய்தினார்கள். எனவே, அம்மாதத்தில் மக்கள் கவலைப்படாமல் அவர்களது பிறப்பு குறித்து மகிழ்ச்சியடைவது மிக ஏற்றமானதல்ல." (அல்மவ்ரித் பீஅமலில் மவ்லித்)

4. அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு இப்றாஹீம் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: "மார்க்கத்திற்கு முரணான இந்த பித்அத்திற்கு ஆதாரமாகக் கூறப்படுவதற்கு நபித்தோழர்களிடத்திலோ, தாபிஈன்களிடத்திலோ, அவர்களைப் பின்பற்றி தபஉத் தாபிஈன்களிடத்திலோ எவ்விதச் சான்றுகளும் காணப்படவில்லை." (பத்வாத் தொகுப்பு)

5. அஷ்ஷெய்ஹ் ஹமூத் அத்துவைஜிரீ ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடும் தினமாக எடுத்துக்கொள்பவர்கள் இந்த பித்அத்தின் காரணமாக அவர்களுக்கு கூலி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படக்கூடியவர்களல்லர். மாறாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவளது தோழர்களும் இருந்த கொள்கைக்கு மாறுசெய்ததின் காரணமாக அவர்களுக்குத் தண்டனை இறங்கிவிடும் என அச்சம் கொள்ளப்படுகிறது." (அர்ரத்துல் கவீ அலர்ரிபாஈ)

6. அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தையோ, ஏனையோரின் பிறந்த தினத்தையோ கொண்டாடுவது ஆகுமாகாது. ஏனெனில், அது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட பித்அத்தாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, நேர்வழிபெற்ற நான்கு கலீபாக்களோ, ஏனைய ஸஹாபாக்களோ, தாபிஈன்களோ சிறப்பிக்கப்பட்ட ஆரம்ப மூன்று நூற்றாண்டுகளில் இக்காரியத்தை மேற்கொள்ளவில்லை. இவர்களே பின்னால் உருவாக்கிய மனிதர்களை விட சுன்னாவைப்பற்றி மிகவும் அறிந்தவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பரிபூரணமாக விரும்பியவர்களும் அவர்களது மார்க்கத்தைப் பூரணமாகப் பின்பற்றியவர்களுமாவர்." (ஹுக்முல் இஹ்திபால் பில்மவ்லிதின் நபவீ)

7. அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: "மீலாதுந் நபி விழா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலோ, ஸஹாபாக்களின் காலத்திலோ, தாபிஈன்களின் காலத்திலோ, தபஉத் தாபிஈன்களின் காலத்திலோ இல்லாதிருக்கும் நிலையில் இது எவ்வாறு மார்க்கமாக முடியும்?" (ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர்)

8. அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பைக் கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஏனெனில், இக்கொண்டாட்டம் மார்க்கமாக இருக்குமென்றால் இத்தினத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டாடியிருப்பார்கள். அல்லது, இத்தினத்தைக் கொண்டாடுமாறு இந்த உம்மத்திற்கு ஏவியிருப்பார்கள்." (பத்வாத் தொகுப்பு)

9. அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறப்பைக் கொண்டாடுவது பித்அத்தாகக் கணிக்கப்படும். இக்கொண்டாட்டத்தை ஆகுமாக்கி வைக்கக்கூடிய அல்லது, விரும்பத்தக்கதாக ஆக்கிவைக்கக்கூடிய ஹதீஸோ, குர்ஆன் வசனமோ காணப்படவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, ஸஹாபாக்களோ, தாபிஈன்களோ இத்தினத்தைக் கொண்டாடவில்லை. இக்கொண்டாட்டத்தை உருவாக்கியவர்கள் ராபிழாக்களைச் சேர்ந்த அபீதிய்யூன்கள் ஆவார்கள். ஷாம் நாட்டு சில அரசர்கள் இக்கொண்டாட்டத்தை உருவாக்கினார்கள் என்றும் சிலர் கூறியுள்ளனர்." (கார்ரதுல் அஷ்ரிதா)

10. சஊதி பத்வாக்கு குழுவைச் சேர்ந்த ஆலிம்கள் கூறுகின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுவது பித்அத்தான ஹராமாக்கப்பட்ட ஒன்றாகும். ஏனெனில், அதற்கு குர்ஆனிலோ, சுன்னாவிலோ எவ்வித ஆதாரமும் இல்லை. நேர்வழி பெற்ற கலீபாக்களும் சிறப்பிக்கப்பட்ட ஆரம்ப மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த எமது முன்னோர்களும் இக்காரியத்தைச் செய்யவில்லை." (அல்லஜ்னதுத் தாஇமா இணையதளம்)

11. அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிளஹுல்லாஹ் கூறுகின்றார்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதை நாம் எடுத்துப் பார்க்கின்றபோது அதற்கு சுன்னாவிலோ, நேர்வழிபெற்ற கலீபாக்களின் வழிமுறையிலோ எவ்வித ஆதாரத்தையும் நாம் காணமுடியாது. எனவே, இக்காரியம் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட காரியமாகும். மேலும், வழிகெடுக்கக்கூடிய பித்அத்துமாகும்." (ஹுகூகுன் நபி)

12. அஷ்ஷெய்ஹ் அப்துல்முஹ்ஸின் ஹபிளஹுல்லாஹ் கூறுகின்றார்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறந்த தினக் கொண்டாட்டத்தை உருவாக்கியவர்கள் ராபிழாக்களைச் சேர்ந்த அபீதிய்யூன்கள் ஆவார்கள். இக்கொண்டாட்டத்தில் அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள் வழிகேட்டில் விழுந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடும் கிறிஸ்தவர்களே ஆவார்கள்." (ஸஹாபுஸ் ஸலபிய்யா இணையதளம்)

குறிப்பு: மீலாதுந் நபி விழா மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்று சிலர் பத்வா வழங்கியுள்ளனர். அந்த பத்வாவைப் பொறுத்தவரையில் ஆதாரமற்ற பத்வா ஆகும். எந்தவொரு பத்வாவையும் ஆதாரமின்றி ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.