ஆர்ப்பாட்டம் செய்து உரிமைகளை வென்றொடுப்பது இஸ்லாம் காட்டித்தருகின்ற வழிமுறையா? – 01

بسم الله الرحمن الرحيم

ஆர்ப்பாட்டம் என்றால் என்ன?

ஒரு கருத்தை நிலை நாட்டுவதற்கு அல்லது ஒரு வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாதையில் அல்லது ஓர் இடத்தில் ஒன்று கூடுவது அல்லது பாதைகளில் நடந்து செல்வது ஆர்ப்பாட்டம் எனப்படும்.

ஆர்ப்பாட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் தங்களின் உரிமைக்காகப் போராடுகின்றோம் என்ற பெயரில் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக ஹவாரிஜ்கள் யஹூதிகளின் திட்டத்தின் அடிப்படையில் ஆரம்பித்த ஒன்று தான் இந்த ஆர்ப்பாட்டமாகும். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தான் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வழி முறை பற்றி இஸ்லாத்தின் நிலை!

முஸ்லிம் ஆட்சியாளர் விடயத்தில் கட்டுப்படுவது கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான்: விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் இன்னும், தூதருக்கு கட்டுப்படுங்கள். இன்னும், உங்களின் காரியங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு கட்டுப்படுங்கள்.

-     அந்நிஸா: 59

ஆட்சியாளர் தான் ஒரு பாவியாகவும் ஆட்சியில் அநியாயக்காரனாகவும் கொடுங்கோனாகவும் இஸ்லாமிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு செய்யும் காலம் வரை அவருக்கு கட்டுப்படுவது கட்டாயமாகும்.

ஆதாரங்கள்:

முதலாவது:

நாம் இரகசியத்திலும் பரகசியத்திலும் கஷ்டத்திலும் இலேசிலும் அறிவு குன்றிய நிலையிலும்; அவரிடத்தில் வெளிப்படையான நிராகரிப்பைக் காணாத வரையும் அதில் தெளிவான அத்தாட்சி எம்மிடம் இருக்கும் வரையும் நாம் தலைவருக்கு கட்டுப்படுவோம் செவியேற்போம் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பைஅத் செய்தோம். அறிவிப்பவர்: உபாதத் பின் ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

-    புகாரி முஸ்லிம்

இரண்டாவது:

பாவத்தின் பக்கம் ஏவப்படாத வரை தான் விரும்பும் வெறுக்கும் விடயத்திலாக இருந்தாலும் ஒரு முஸ்லிமான தலைவருக்கு கட்டுப்படுவதும் செவியேற்பதும் கடமையாகும். அவர் பாவத்தைக் கொண்டு கட்டளையிட்டால் செவியேற்கவோ கட்டுப்படவோ அவசியமில்லை என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு

-    புகாரி முஸ்லிம்

பாவத்தின் பால் கட்டளை இடும் யாராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டிய அவசிமில்லை. ஏனென்றால், நபியவர்கள்; படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்புகளுக்கு வழிப்பட அவசிமில்லை என்று கூறினார்கள்.

எனவே, அவர் எதனைச் சொன்னாலும் இறைவனுக்கு மாற்றம் செய்யும் விடயமாக இருந்தால் அதற்கு கட்டுப்பட வேண்டிய கடமை எம்மை விட்டும் நீங்கிவிடுகின்றது. ஆனால், நாம் அவருக்கு எதிராகச் செயல்பட நபியவர்கள் அனுமதி வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டமோ கிளர்ச்சியோ செய்ய முடியாது.

மூன்றாவது:

ஜுனாதத் பின் அபீஉமைய்யா கூறினார்கள்: நாங்கள் உபாதத் பின் ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நோயாளியான நிலையில் அவரிடத்தில் சென்று நீங்கள் நபியவர்களிடமிருந்து செவியேற்ற ஒரு ஹதீஸை எங்களுக்கு சொல்லுங்கள் அதன் மூலம் அல்லாஹ் பயனளிப்பதுடன் உங்களையும் அல்லாஹ் சீர்படுத்துவான் என்று நாம் கூறினோம், அதற்கவர் எங்களை நபியவர்கள் அழைத்து - வாக்குறுதி எடுத்தார்கள் - நாம் விரும்பும் நிலையிலும் வெறுக்கும் நிலையிலும் எமக்கு கஷ்டமான இலகுவான நிலையிலும் உரிமைகள் பறிக்கப்படும் நிலையிலும் வெளிப்படையான நிராகரிப்பை நீங்கள் காணாத வரை அல்லாஹ்விடத்திலிருந்து தெளிவான அத்தாட்சி உங்களிடம் இல்லாத வரை ஆட்சித் தலைவருக்கு கட்டுப்பட வேண்டும் செவியேற்க வேண்டும் என்றும் நாம் நபியவர்களுக்கு உறுதிமொழி வழங்கினோம் என்று கூறினார்கள்.

-    புகாரி முஸ்லிம்

நான்காவது:

எனக்குப் பின்னால் உரிமைகள் பறிக்கப்படுவதும் நீங்கள் வெறுக்கும் அம்சங்களும் நிகழும் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், அப்போது நபித்தோழர்கள் எங்களில் யார் அதனை அடைந்து கொள்கிறாரோ அவருக்கு நீங்கள் எப்படி கட்டளையிடுகின்றீர்கள்? என்று வினவினார்கள்! அதற்கு நபியவர்கள் அவர்களுக்குரிய உரிமையை - கட்டுப்படுதலை - நீங்கள் நிறைவேற்றுங்கள். உங்களுக்குரியதை அல்லாஹ்விடத்தில் நீங்கள் கேளுங்கள் என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு

-    புகாரி முஸ்லிம்

ஐந்தாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸலமத் பின் யஸீத் அல்ஜுஃபீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டதாக அல்கமா பின் வாயில் அல்ஹழ்ரமீ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: தங்கள் உரிமைகளை எம்மிடம் கேட்டு பெற்றுக் கொண்டும் எங்களின் உரிமைகளைத் தடுக்கும் தலைவர்கள் விடயத்தில் எதனை எமக்கு ஏவுகின்றீர்கள் என்று கேட்ட போது, நபியவர்கள் அவரைப் புறக்கணித்துவிட்டார்கள், பின்பும் அவர் கேட்ட போது அவரைப் புறக்கணித்துவிட்டார்கள், இரண்டாவது மூன்றாவது தடவையும் புறக்கணித்து விட்டார்கள், அஷ்அஸ் பின் கைஸ் தொடர்ந்தும் இது குறித்து அறிவிப்பாளரிடம் வினவியபோது - அவர் நபியவர்கள் கூறியதைப் பின்வருமாறு கூறுகிறார் - : நீங்கள் செவியேற்றுக் கொள்ளுங்கள் இன்னும் கட்டுப்படுங்கள் என்றும்;, நிச்சயமாக அவர்கள் மீது சுமத்தப்பட்டது அவர்களுக்குண்டு இன்னும் உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களுக்குண்டு என்றும்; கூறினார்கள்.

-    முஸ்லிம்

மேற்சொல்லப்பட்ட நபிமொழிகளை மிகவும் ஆழமாக சிந்திக்கும் போது நீதமான மிகவும் வீரமான தலைவரான நபியவர்கள் இவ்வாறான பித்னாக்கள் தோன்றாமல் இருப்பதற்கு எவ்வகையான நடவடிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்கள் என்பது தெளிவாகும். இந்த உம்மத்தில் ஆட்சியாளர்களால் அடக்கு முறைகளும் குழப்பங்களும் தோன்றும் என்பதனை அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகவும் தெளிவாக முன்னறிவிப்பு செய்திருப்பதனை நாம் அவதானிக்கலாம். ஆனால், இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொறுமையைக் கொண்டு தான் உபதேசம் செய்துள்ளார்கள்.

ஆட்சியாளர்களிடம் தங்களின் தேவைகளையும் நாட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தான் வழியல்ல. இது யூத கிரிஸ்தவர்களின் உருவாக்கமாகும். இவ்வாறான வழிமுறைகள் அல்லாஹ் ரஸூலுடைய வழிமுறையல்ல இவ்வழியில் செல்ல எந்த முஸ்லிமுக்கும் அனுமதியில்லை. அல்லாஹ் ரஸூல் காட்டிய வழிமுறையே வெற்றியைத் தரும் வழிமுறையாகும். ஏனைய எல்லா உருவாக்கமும் வழிகேட்டையும் பாதிப்புக்களையும் தோற்றுவிக்கும்.

ஆட்சியாளர்களின் கீழ் வாழும் மக்களுக்கு அநியாயம் விளைவிக்கப்படும் என்பதும் அதன் போது மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் முன்னறிவிப்புக்களாகும். இங்கே நபியவர்கள் ஜனநாயக வழிமுறையைக் காட்டவில்லை என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இவ்வாறான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ஜனநாயகம் என்ற பெயரிலேயே முன்வைக்கப்படுகின்றன. ஜனநாயகம் இஸ்லாமிய ஆட்சிமுறையல்ல. அதற்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதும் இஸ்லாமிய முறையல்ல.

அப்படியென்றால் நாம் எமது உரிமைகளை எப்படி யாரிடம் பெற்றுக் கொள்வது? நாம் இவ்வாட்சியாளர்களுக்கு கீழ் அடிமைகளாக துன்பப்பட்டவர்களாக இருப்பதா? எமது உரிமைகள் வென்றெடுக்கப்படக் கூடாதா? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்பார்கள். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக இவ்வாறெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்படலாம். இச்சந்தர்ப்பத்தின் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் மிகவும் தெளிவாக வஹியால் பதிலளித்துள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூமுஆத் ஜமாலுத்தீன் இப்னு பாரூக்