அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 04

بسم الله الرحمن الرحيم

 31. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

06. வெறுத்தல்

ஸலபிகளான நாங்கள் அல்லாஹுத்தஆலா தான் நாடியவைகளை வெறுக்கிறான் என்று ஈமான் கொண்டுள்ளோம். நாங்கள் ஏன் இப்படி 'வெறுத்தல்' என்ற செயலை உறுதிப்படுத்துகின்றோம் என்றால், அல்லாஹ்வும் இச்செயலை உறுதிப்படுத்தியிருக்கிறான் என்பதற்காகவேயாகும். அல்லாஹ் ஸூரதுத் தவ்பாவின் 46ம் வசனத்தில் '...எனினும் அவர்கள் (உம்முடன்) புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்களை தடுத்து விட்டான்' என்று கூறுகிறான்.

32. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

07. தண்டித்தல்

அஹ்லுல் ஹதீஸான நாங்கள் அல்லாஹுத்தஆலா தான் நாடியவரை தண்டிக்கிறான் என்று ஈமான் கொண்டு தண்டித்தல் என்ற செயல் சார்ந்த பண்பை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துகின்றோம். அல்லாஹ் கூறும் போது: 'அவர்கள் எங்களைக் கோபப்படுத்தியபோது  நாம் அவர்களைத் தண்டித்தோம் பின் அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்' என்று ஸூரதுஸ் ஸுஹ்ருப்: 55ம் வசனத்தில் கூறுகிறான்.

33. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

08. சந்தோசப்படுதல்

அஹ்லுல் ஹதீஸான நாங்கள் அல்லாஹுத்தஆலா சந்தோசப்படுகிறான், அவனுக்கு சந்தோசம் என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று ஈமான் கொள்கிறோம். இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது: 'பாலைவனத்தில் பிரயாணம் செய்யும் போது உங்களின் ஒருவரின் கட்டிச் சாதனம் உள்ள வாகனம் காணாமல் போய் பின்பு அவ்வாகனத்தைப் பெற்றுக் கொண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோசப்படுவீர்களோ அதைவிட அல்லாஹ் அவனின் அடியான் அவனிடம் பாவமீட்சி பெறும் போது சந்தோசப்படுகிறான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

34. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

09. சிரித்தல்

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய வார்த்தையை திரிவுபடுத்தாது நம்புவோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: 'இரு மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.  அவ்விருவரில் ஒருவர் மற்றவரைக் கொலை செய்து, (கொலை செய்தவர் தண்டிக்கப்படாது) அவ்விருவரும் சுவனம் நுளைவதைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான்.'

அவ்விருவரில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்து கொல்லப்படுகிறார். அல்லாஹ் அம்மனிதனைக் கொலை செய்தவரை மன்னிக்கும் முகமாக அவரையும் யுத்தத்தில் (பங்கேற்க வைத்து) கொலை செய்யப்படவைக்கின்றான். (இருவரும் சுவனவாசிகளாக மாறுகிறார்கள்) இச்செயலைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான்.

35. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

10. ஆச்சரியப்படுதல்

நாங்கள் அல்லாஹுத்தஆலாவை அவனின் அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் ஆச்சரியப்படுகிறான் என்றும் அவ்வாச்சரியம் படைப்புகள் ஆச்சரியப்படுவது போன்று அறியாமையின் பின் அறிவதன் மூலம் ஏற்படும் ஆச்சரியம் போன்றதல்ல என்றும் அவ்வாச்சரியம் ஏற்படுவது அல்லாஹ் அறிந்த ஒன்று படைப்பின் வழமைக்கு மாற்றமாக நடைபெறுமாயின் அப்படியான விடயத்தைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான் என்று ஈமான் கொள்கிறோம்.

ஒரு முறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து: 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு கடும் பசி ஏற்பட்டுள்ளது' என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரை தன் மனைவிகளின் வீடுகளை நோக்கி அனுப்பி ஏதாவது உள்ளதா என விசாரித்தார்கள். அவர்களிடத்தில் எதையும் நபியவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; 'இம்மனிதனுக்கு விருந்தளிப்பவர் எவர் இருக்கிறார்? அல்லாஹ் அவருக்கு அருள் செய்யட்டும்!' எனக் கூறியபோது, அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் எழுந்து: 'அல்லாஹ்வின் தூதரே! நான் என்று கூறினார்.' பின் அந்த ஸஹாபி அம்மனிதரை அவர் வீடுக் கூட்டிச் சென்றார். அல்லாஹ்வின் தூதரின் விருந்தாளி வந்துள்ளார் எனத் தன் மனைவியிடம் கூறி, ஏதாவது சேர்த்து வைத்துள்ளீரா? என வினவினார். அதற்கு, 'பிள்ளைகளின் உணவைத்தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை' என அம்மனைவி கூறினாள். அப்போது அவர் 'பிள்ளைகள் இரவு உணவை நாடினால் அவர்களை உறங்கச் செய்! பின் நீர் வந்து விளக்கை அனைத்து விடு! நாங்கள் சாப்பிடுவது போன்று பாசாங்கு செய்வோம்' என்று கூறினார். அவ்வாறே அவளும் செய்தாள். அவ்விருந்தாளியும் சாப்பிட்டார். மறுநாள் அந்த ஸகாபி காலைப்பொழுதில் ரஸூலுல்லாஹ்வை அடைந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: 'இன்னின்னார்களின் செயலைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான்' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ஸூரதுல் ஹஷ்ரின் 09ம் வசனத்தை இறக்கினான். அவ்வசனமாவது: 'மேலும் தமக்குத் தேவையிருந்தபோதிலும் தம்மைவிட அவர்களையே முற்படுத்துவார்கள்.' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி)

36. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

11. ரோஷப்படுதல்

நாங்கள் அல்லாஹ்வுக்கு 'ரோஷப்படுதல்' என்ற செயல் சார்ந்த பண்பை அவனின் அந்தஸ்திற்குத் தக்க விதத்தில்  உறுதிப்படுத்துகின்றோம். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: 'புஹாரியில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது:  'நிச்சயமாக அல்லாஹ் ரோஷப்படுகிறான். ஒரு விசுவாசி அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை செய்யும்போது அல்லாஹ் ரோஷப்படுகிறான்' என்று கூறினார்கள்.

37. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

12. கூறுதல்

அல்லாஹ் தான் நாடிய விடயங்களை நாடியபோது நாடியவிதத்தில் மற்றவர்களுக்குக் கூறுகிறான் என்று நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில், ஸூரதுல் பகரா: 30ம் வசனத்தில்: '(நபியே!) நிச்சயமாக நான் பூமியில் தலைமுறையை படைக்கப்போகிறேன் என்று கூறியதை நினைவு கூறுவீராக!' என்று அல்லாஹ் தான் கூறிய விடயத்தை அல்குர்ஆனில் கூறுகிறான்.

38. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

13. பார்த்தல்

நாங்கள் பின்வரும் ஹதீஸை ஈமான் கொள்கின்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடம்புகளையும் தோற்றங்களையும் பார்க்கமாட்டான். மாறாக, அவன் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)

39. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

14. உயர்தல்

வணங்கப்படத்தகுதியான அல்லாஹ் வானத்தை நோக்கி உயர்ந்து தற்போது அவன் ஏழுவானத்திற்கு மேல் உள்ள ஜன்னதுல் பிர்தவ்ஸின் முகடான அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் இருந்து படைப்பினங்களின் விடயங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு உயர்தல் என்ற செயல் சார்ந்த பண்பை நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம்.

அல்லாஹ் கூறுகிறான்: 'பின்பு அவன் வானத்தின் பக்கம் உயர்ந்தான் அ(வ்வானமான)து புகை மண்டலமாக இருந்தது. பின் அவன் அதற்கும் பூமிக்கும் 'நீங்கள் இருவரும் விரும்பியோ, வெறுத்தோ வாருங்கள்' எனக் கூறினான். அப்போது அவ்விரண்டும் நாம் விரும்பியவர்களாக வருகிறோம் எனக் கூறின.' (ஸூரா புஸ்ஸிலத்: 11)

40. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

15. கட்டளையிடுதல்

அல்லாஹ் கூறும்போது: 'படைப்பதும் கட்டளையிடுவதும் (அல்லாஹ்வாகிய) அவனுக்கே உறியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறுகிறான். (ஸூரதுல் அஹ்ராப்: 54) ஆதலால், ஸலபிகளாகிய நாங்கள் கட்டளையிடுவதும், ஏவுவதும் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளில் உள்ளவையாகும் என்றும் அவை அல்லாஹ்வாகிய அவனிலே இருக்கும் வார்த்தை, பேச்சுடன் தொடர்புபட்ட விடயங்களில் உள்ளடங்கக் கூடியவை  என்றும் நம்புகிறோம்.

-      இன்ஷா அல்லாஹ் தொடரும்.

தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்