அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 6

விளக்கம்:

(وَرُسُلِهِ) இவ்வாசகத்தின் மூலம் ‘அல்லாஹ்வின் தூதர்கள்’ நாடப்படுகின்றார்கள். அத்தகையவர்கள், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹி மூலம் தெரியப்படுத்தப்பட்டவர்களாகவும், அவற்றை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்களாகவும் இருப்பர். அவர்களில் முதலாமவராக நூஹ் (அலை) அவர்களும், இறுதியானவராக முஹம்மத் (ஸல்) அவர்களும் இருக்கின்றார்கள்.

உண்மையில் நூஹ் (அலை) அவர்கள் தூதர்களில் முதலாவது அனுப்பப்பட்டவர் என்பதற்கான ஆதாரங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸூன்னாவிலும் காணக்கூடியதாக இருக்கின்றன. அவற்றுள் பிரதானமான ஆதாரங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.

 

  • அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘(நபியே!) நூஹூக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே, உமக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம்’. (அன்னிஸா:163) இந்த வசனத்தில் நூஹ் (அலை) அவர்களுக்கும், அவர்களுக்குப் பிறகு வந்த நபிமார்களுக்கும் அல்லாஹூத்தஆலா வஹீ அறிவித்ததாகக் கூறுகின்றான். நிச்சயமாக அவ்வஹீயானது தூதுத்துவத்தைக் குறிக்கும் வஹீயாகத்தான் இருக்க வேண்டும்.
  • அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘மேலும், நூஹையும், இப்றாஹீமையும் திட்டமாக நாம் (நம்முடைய தூதர்களாக) அனுப்பிவைத்தோம் அவ்விருவருடைய சந்ததியில் நபித்துவத்தையும், வேதத்தையும் ஆக்கியிருந்தோம்’. (அல்ஹதீத்:26) இவ்வசனத்தில் மிகத் தெளிவாக தூதர்களாகிறவர்கள், நூஹ் (அலை) மற்றும் இப்றாஹீம் (அலை) ஆகியோரின் சந்ததியில் இருந்து அனுப்பப்பட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இப்படியிருக்க, அவ்விருவருக்கும் முன்வாழ்ந்தவர்களை எப்படி அவர்களின் சந்ததிகளாகக் கூற முடியும்?
  • அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘(இவர்கள் அனைவருக்கும்) முன்னர் நூஹூடைய சமூகத்தாரையும் (நாம் அழித்துவிட்டோம்). நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தனர்’. (அத்தாரியாத்:46) இவ்வசனத்தில் இடம்பெறும் ‘ مِنْ قَبْلُ ‘ என்ற வார்த்தை ‘முன்னர்’ என்ற கருத்தை உணர்த்தி நிற்கின்றது. இக்கருத்தானது எல்லாத் தூதர்களுக்கும் ஆரம்பமாக நூஹ் (அலை) தூதராக அனுப்பப்பட்டார் என்ற கருத்தைப் பிரதிபளிக்கச் செய்கின்றது.

 

எனவே மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் இருந்து நூஹ் (அலை) அவர்களே முதலாவது அனுப்பப்பட்ட தூதர் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது தவிர இவ்வாதத்தை ஊர்ஜீதப்படுத்தும் செய்திகள் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மிகப்பிரதானமான ஒரு செய்தியை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.

புகாரி (7440) முஸ்லிம் (194) ஆகிய கிரந்தங்களில் ஷபாஅத் தொடர்பாக இடம்பெற்ற ஒரு செய்தியில் மஹ்ஷர் மைதானத்தில் குழுமியிருக்கும் மக்கள் நூஹ் (அலை) அவர்களிடத்தில் வந்து ‘நீங்கள் தான் உலகத்தாருக்கு அல்லாஹூத்தஆலாவினால் அனுப்பப்பட்ட தூதர்களில் முதலாமவராக இருக்கின்றீர்கள் ……….’ என்று கூறுவார்கள். இச்செய்தி மிகப்பட்டவர்த்தனமாக நாம் மேலே எடுத்துரைத்த வாதத்தை உறுதி செய்யக்கூடியதாக இருக்கின்றது.

ஆதம் (அலை) அவர்களைப் பொறுத்தவகையில் அவர் ஒரு நபியாக மாத்திரம் இருந்தார் என்பதே உறுதியான தகவலாகும். மேலும் இத்ரீஸ் (அலை) அவர்களைப் பொறுத்தவகையில் அதிகமான வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் சில அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் அவரை நூஹ் (அலை) அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவராகவும் நூஹ் (அலை) அவர்களின் மூதாதையர்களில் ஒருவராகவும் கூறுகின்றனர். ஆயினும் இக்கருத்து மிக பலவீனமானது என்பதை அல்குர்ஆன் அஸ்ஸூன்னா ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

وَالبَعْثِ بَعْدَ المَوْتِ

விளக்கம்:

மேலும், இறைத்தூதர்களில் இறுதியானவராக நபியவர்கள் உள்ளார்கள். இதனைப் பல ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கவனிக்க. ‘எனினும், அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (க் கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார்’. (அல் அஹ்ஜாப்: 40)

இவ்வசனத்தில் தூதர்களில் இறுதியானவர் என்று கூறாமல் நபிமார்களில் இறுதியானவர் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், நபியவர்களுடன் நுபுவ்வத் நிறைவு பெற்றது என்று கூறுவதின் மூலம் தூதுத்துவமும் அவருடன் நிறைவு பெற்றது என்ற வாதம் உறுதியாகின்றது.

நபிமார்களை ஈமான் கொள்வதில் உள்ளடங்கக்கூடிய அம்சங்கள்

 

  • நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்கள் என நம்பிக்கை கொள்ளல்.
  • அவர்கள் அனைவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றினார்கள் என நம்புதல்.
  • அவர்களுக்கு மத்தியில் எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காதிருத்தல்.
  • மொத்தமாக அல்லாஹுத்தஆலா பெயர் குறிப்பிட்ட நபிமார்களையும் பெயர் குறிப்பிடாமல் விட்ட நபிமார்களையும் ஈமான் கொள்ளல்.
  • அல்லாஹ் சிறப்பித்துக் கூறியவர்களை சிறப்பித்தல். அதன் வரிசையில் ‘உலுல் அஸ்ம்’ எனும் நபிமார்கள் குழு முதலிடத்தை வகிக்கின்றனர். அவர்கள் முறையே, நூஹ் (அலை), இப்றாஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர்களாவர். அவர்களைத் தொடர்ந்து ஏனைய தூதர்களும் பிறகு நபிமார்களும் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றனர். ஆயினும், அவர்கள் அனைவரையும் விட சிறப்புக்குரிய நபராக நபியவர்கள் இருக்கின்றார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

 

‘நபி’, ‘ரஸூல்’ ஆகிய வார்த்தைகளுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்து பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் மிக ஏற்றமான கருத்தாகவும், பலரால் வரவேற்கத்தக்க கருத்தாகவும் பின்வரும் கருத்து அமையப்பெற்றுள்ளது. ‘நபியானவர், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹீ மூலம் தெரியப்படுத்தப்பட்டவராகவும், அதனை எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்படாதவருமாக இருப்பார். ரஸூலானவர், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹீ மூலம் தெரியப்படுத்தப்பட்டவராகவும், அதனை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவராகவும் இருப்பார்’.

(والبعث بعد الموت)

இவ்வாசகமானது, மரணித்தவர்கள் தங்களது மண்ணறைகளைவிட்டும் உயிர் பெற்று எழுப்பப்படும் மறுமை நாள் குறித்த நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றது. அவ்வாறு எழுப்பப்படுவதாகிறது, அவர்கள் உலகில் புரிந்த அமல்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு கூலி கொடுக்கப்படுவதற்காகும். இது குறித்த வர்ணனைகள் அல் குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை உள்ளபடி ஈமான் கொள்வது எமது கடமையாகும். இவ்விடயம் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினரின் கொள்கை கோட்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. யுத கிரிஸ்தவர்கள் கூட இதுவிடயத்தில் தெளிவான கொள்கையை உடையவர்களாக இருக்கின்றனர்.

அல்குர்ஆனில் இவ்விடயம் குறித்து அல்லாஹுத்தஆலா குறிப்பிடும் போது….

‘(மரணித்த பின்னர் நிச்சயமாக உயிர் கொடுத்து) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்போர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர், (நபியே!) நீர் கூறுவீராக: ‘அவ்வாறல்ல! என் இரட்சகன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்’. (அத்தகாபுன்: 7)

‘(மனிதர்களே!) பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பெய்தக் கூடியவர்கள். பின்னர், மறுமை நாளின் போது நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்’. (அல் முஃமினூன்: 15,16)

மேலும், இது குறித்த பல செய்திகள் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றையும் கருத்திற் கொண்டு மறுமை விடயத்தில் பூரண நம்பிக்கையுள்ள மக்களாக நானும் நீங்களும் ஆகுவோமாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM