அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 16

وَقَوْلُهُ : يَعْلَمُ مَا يَلِجُ فِي الأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاء وَمَا يَعْرُجُ فِيهَا ، وَعِندَهُ مَفَاتِحُ الْغَيْبِ لاَ يَعْلَمُهَا إِلاَّ هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِن وَرَقَةٍ إِلاَّ يَعْلَمُهَا وَلاَ حَبَّةٍ فِي ظُلُمَاتِ الأَرْضِ وَلاَ رَطْبٍ وَلاَ يَابِسٍ إِلاَّ فِي كِتَابٍ مُّبِين وَقَوْلُهُ: وَمَا تَحْمِلُ مِنْ أُنثَى وَلا تَضَعُ إِلاَّ بِعِلْمِه ، وَقَوْلُهُ: لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا وقوله : إن الله هو الرزاق ذو القوة المتين

விளக்கம்:

அல்லாஹ்வின் அறிவு அனைத்துப் படைப்பினங்களையும் சூழ்ந்துள்ளது என்பதற்கான சான்றுகள்

மேற்கூறப்பட்ட அனைத்து திருமறை வசனங்களும் நாம் தலைப்பாக இட்டுள்ள மையக்கருத்தைத் தெளிவுபடுத்தக் கூடியனவாக இருக்கின்றன. அத்திருமறை வசனங்களின் கருத்துக்களைத் தொகுத்துத் தருகின்றோம், நன்கு அவதானமாக வாசித்துப் பாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

அல்லாஹ் கூறுகின்றான்:

‘பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளிவருவதையும் வானத்திலிருந்து இறங்குவதையும் அதில் உயர்வதையும் அவன் நன்கறிவான்.’ (ஸபஃ: 2)

அல்லாஹ் கூறுகின்றான்: ‘அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவனைத் தவிர வேறுயாரும் அவற்றை அறியமாட்டார்கள். மேலும், தரையிலும் கடலிலும் உள்ளவற்றை அவன் நன்கறிவான். எந்த ஒர் இலையும் அவன் (அதை) அறியாமல் விழுவதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையோ பசுமையானதோ காய்ந்ததோ எதுவாயினும் தெளிவான ஏட்டில் இல்லாமலில்லை.’ (அல்அன்ஆம்: 59)

அல்லாஹ் கூறுகின்றான்: ‘அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை (பாதிர்: 11)

அல்லாஹ் கூறுகின்றான்: ‘நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்றும், நிச்சயமாக அல்லாஹ் அறிவால் யாவற்றையும் சூழ்ந்தவன் என்றும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (இவ்வாறு படைத்தான்)’ (அத்தலாக்: 12)

அல்லாஹ் கூறுகின்றான்: ‘நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனும், பலமிக்கவனும் , உறுதியானவனுமாவான்.’ (அத்தாரியாத்: 58)

ُ وَقَوْلُهُ: لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِير وَقَوْلُهُ:إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا

விளக்கம்:

அல்லாஹ்வுக்கு செவிப்புலனும், கட்புலனும் உள்ளன என்பதை உறுதி செய்யும் சான்றுகள் மேற் கூறப்பட்ட திருமறை வசனங்களில் அல்லாஹ்வுக்கு செவிப்புலனும் கட்புலனும் உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்திருமறை வசனங்களின் தமிழ் வடிவமானது, அல்லாஹ் கூறுகின்றான்: ‘அவனைப் போன்று எதுவுமில்லை, அவன்செவியேற்பவன், பார்ப்பவன்.’ (அஷ்ஷுரா: 11)

இவ்வசனம் குறித்து இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள் கூறும்போது: ‘எவர்கள் இந்த வசனத்தை உரிய முறையில் விளங்கி ஆராய்ந்துள்ளார்களோ அவர்கள் அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் முரண்பட்ட கருத்தையுடையவர்களுடன் உண்டாகும் கருத்துவேறுபாட்டின் போது தெளிவான மற்றும் வெண்மையான பாதையில் பயணிப்பர். அத்துடன் அவன் செவியேற்பவன், பார்ப்பவன் என்ற வசனத்தை கருத்தூண்றிப் பார்ப்பவர்களுக்கு மென்மேலும் தெளிவு கிடைக்கின்றது, என்று தொடர்கிறது அவரது கருத்துரை…

அல்லாஹ் கூறுகின்றான்: ‘நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குச் செய்யும் உபதேசம் மிகச் சிறந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனும், பார்ப்பவனுமாக இருக்கின்றான்.’ (அந்நிஸா: 58)

எனவே, இத்திருவசனங்களில் அல்லாஹ்வுக்கு செவிப்புலனும், கட்புலனும் உள்ளன என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயினும் இவ்விடயத்தை நாம் முதலில் குறிப்பிட்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு அணுக வேண்டும். அதாவது, அவனுக்கு இவ்விரு பண்புகளும் இருந்தாலும் அவை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாகாது என்பதுவாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM