அமல்களை அதிகரிப்போம்! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்!

بسم الله الرحمن الرحيم

பொதுவாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதலானது நாவு, உள்ளம், மற்றும் உடல் உறுப்புக்கள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகின்றது. நாம் நாவால் அல்லாஹ்வைப் புகழ்வது அவனுக்கு நாவால் வெளிப்படுத்தும் நன்றியாக அமைகின்றது. மேலும், உள்ளத்தால் செலுத்தும் நன்றியானது அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை ஏற்றுக்கொள்வதிலும் அவனை நேசிப்பதிலும், மகத்துவப்படுத்துவதிலும் தங்கியுள்ளது. இன்றும், அல்லாஹ்வை வழிப்படுவதின் மூலம் உடல் உறுப்புக்களால் செய்கின்ற நன்றி வெளிப்படுகின்றது.

அந்த அடிப்படையில், உடல் உறுப்புக்களைக் கொண்டு நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்குச் செலுத்தும் நன்றியாக அமைகின்றது என்பதற்கு கீழ்காணும் ஆதாரங்களை முன்வைக்க முடியும்.

  1. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(ஆகவே) தாவூதுடைய சந்ததிகளே! (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதற்காக செயல்படுங்கள்!" (ஸபஉ: 13)
  2. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "ஆகவே நீங்கள் என்னை நினைவு கூறுங்கள் நானும் உங்களை (அருள் புரிந்து) நினைவு கூறுவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள். இன்னும், எனக்கு மாறு செய்யாதீர்கள்". (அல்பகறா: 152)
  3. அல்லாஹுத்தஆலா நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பற்றிக் கூறும்போது: "(அல்லாஹ்வாகிய) அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார்)" என்கிறான். (அந்நஹ்ல்: 121)
  4. ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் நபியவர்களிடத்தில்: "அல்லாஹ் உங்களுடைய முன் பின் பாவங்களை மன்னித்திருக்கும் நிலையிலுமா? இவ்வாறு நின்று வணங்குகிறீர்கள்!" என்று வினவியதற்கு: "நான் ஓரு நன்றியுள்ள அடியாராக இருக்கக் கூடாதா?" (புகாரி, முஸ்லிம்) என வினவினார்கள்.

எனவே, அன்பார்ந்த சகோதரர்களே! எங்களுடைய நல்லறங்களை அதிகரிந்து, வல்லவன் அல்லாஹ்வுக்கு எமது நன்றிகளை சேர்த்துவிடுவோமாக!