ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

உண்மையான நஷ்டமென்பது அல்லாஹுத்தஆலா வஹி மூலம் எமக்கு இனங்காட்டிய நஷ்டமாகும். மனிதன் வியாபாரம், கற்றல், மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஏற்படக்கூடிய இழப்புக்களை நஷ்டமாகப் பார்க்கிறான். மாறாக, இவைகள் எதார்த்தமான நஷ்டமாகக் கருதப்படமாட்டாது.

மார்க்கம் இனங்காட்டிய நஷ்டங்கள் பல உள்ளன. அவற்றுள் ஸுபஹுத் தொழுகையை தவறவிடுவதும் ஒன்றாகும். அந்தவிதத்தில் ஸுபஹுத் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக் கூடிய நஷ்டங்களில் சிலவற்றை குறிப்பிடுகின்றேன்.

  1.  நயவஞ்சகத்தன்மையில் இருந்து ஈடேற்றம் பெறக்கூடிய உத்தரவாதத்தை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்: "நயவஞ்சகக்காரர்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகள் இஷாத் தொழுகையும் பஜ்ர் தொழுகையுமாகும்." (ஸஹீஹுல் ஜாமிஃ)
  2. சுவனம் நுழைவதற்கு மகத்தான காரணமாகத் திகழக்கூடிய ஒன்றை நழுவவிட்டவர்களாக ஆகிவிடுவோம். நபியவர்கள் கூறினார்கள்: "யார் இரண்டு குளிர்நேரத் தொழுகைகளைத் தொழுகிறாரோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார்." (புகாரி, முஸ்லிம்) அவை பஜ்ர் தொழுகையும் அஸர் தொழுகையுமாகும்.
  3. நரகத்தில் இருந்து விடுதலையைப் பெற்றுத்தரக்கூடிய பாக்கியத்தை இழந்தவராக ஆகிவிடுவார். நபியவர்கள் கூறினார்கள்: "சூரியன் உதயமாவதற்கு முன்னுள்ள தொழுகையையும் சூரியன் மறைவதற்கு முன்னுள்ள தொழுகையையும் தொழக்கூடியவர் நரகம் நுழையமாட்டார். அதாவது, பஜ்ர் தொழுகையும் அஸர் தொழுகையுமாகும்." (முஸ்லிம்)
  4. அல்லாஹ்வுடைய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்: "யார் ஸுபஹுத் தொழுகையில் ஈடுபடுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருப்பார்." (ஸஹீஹுல் ஜாமிஉ)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

அபூ ஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனி)